< Back
மாநில செய்திகள்
வீட்டை அபகரிக்க முயற்சி:கலெக்டர் அலுவலகத்தில்3 பெண்கள் தீக்குளிக்க முயற்சிஉறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தர்மபுரி
மாநில செய்திகள்

வீட்டை அபகரிக்க முயற்சி:கலெக்டர் அலுவலகத்தில்3 பெண்கள் தீக்குளிக்க முயற்சிஉறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தினத்தந்தி
|
10 May 2023 12:30 AM IST

குடியிருக்கும் வீட்டை அபகரிக்கும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலக வாயில் முன்பு மூதாட்டி உள்பட 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அபகரிக்க முயற்சி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரம் அருகே எட்டியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நஞ்சம்மாள் (வயது65) இவரது கணவர் சுப்ரமணி (70).

நஞ்சம்மாளின் தந்தை பெருமாள் கடந்த 2007-ம் ஆண்டு எட்டியானூரில் உள்ள ஆயிரம் சதுர அடி உள்ள வீட்டை நஞ்சம்மாளுக்கு தான பத்திரம் மூலம் எழுதி கொடுத்துள்ளார். எட்டியானூரில் உள்ள அந்த வீட்டில் நஞ்சம்மாள், அவரது மகள் சத்யா (45). மற்றொரு மகள் முருகம்மாள் (34) மற்றும் அவர்களது குழந்தைகள் என அனைவரும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நஞ்சம்மாளின் உறவினர்கள், நஞ்சம்மாள் உள்ளிட்ட அனைவரையும் வீட்டை காலி செய்யும்படி மிரட்டி தகராறு செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக நஞ்சம்மாள் காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தீக்குளிக்க முயற்சி

இதனால் மனமுடைந்த நஞ்சம்மாள், அவரது மகள்கள் சத்யா, முருகம்மாள் ஆகியோர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து நுழைவுவாயிலில் நின்றபடி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடமிருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்தப் பெண்கள் நடந்த சம்பவங்களை போலீசாரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த 3 பெண்களையும் போலீசார் காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூதாட்டி நஞ்சம்மாள், சத்யா, முருகம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் 3 பெண்கள் தீ குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்