< Back
மாநில செய்திகள்
அஞ்செட்டி அருகேசத்துணவு அமைப்பாளர் விஷம் தின்று தற்கொலை முயற்சி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

அஞ்செட்டி அருகேசத்துணவு அமைப்பாளர் விஷம் தின்று தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
21 April 2023 12:30 AM IST

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்துள்ள மிலிதிக்கி கிராமத்தை சேர்ந்த வரதராஜ் மனைவி செல்வராணி (வயது 37). இவர் தக்கட்டி ஊராட்சி பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளிக்கு அருகில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளதால் அதற்கும் செல்வராணி கூடுதல் பொறுப்பில் இருந்து வருகிறார். இதையொட்டி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒரே இடத்தில் அதாவது தொடக்கப்பள்ளியில் உள்ள சமையலறையில் சமையல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செல்வராணிக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் அஞ்செட்டி ஒன்றிய தலைவர் சிக்கமதி ஆகியோர் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பொறுப்புக்கு வேறு ஒருவரை நியமனம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதனால் வேதனையடைந்த செல்வராணி நேற்று விஷத்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்