ஈரோடு
செல்போனை பிடுங்கி தலைமை ஆசிரியரிடம் தாய் ஒப்படைத்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை- நம்பியூர் அருகே பரிதாபம்
|நம்பியூர் அருகே செல்போனை பிடுங்கி தாய் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நம்பியூர்
நம்பியூர் அருகே செல்போனை பிடுங்கி தாய் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
10-ம் வகுப்பு மாணவி
ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் நம்பியூர் பகுதியில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா (வயது 43). இவர் திருப்பூரில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகள்கள் ரூபினிப்ரியா (17), வர்ஷா (15).
இதில் வர்ஷா நம்பியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். வர்ஷா எப்போதும் செல்போனிலேயே நேரம் செலவழித்து வந்ததாக தெரிகிறது. இதனால் தாய் அமுதா திருப்பூரில் இருந்து வீட்டுக்கு வரும்போதெல்லாம் செல்போனை வைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறி வந்துள்ளார்.
தூக்கில் தொங்கினார்
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமுதா வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது வர்ஷா படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போன் பார்த்துக்கொண்டு இருந்தது தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்து அமுதா மகளிடம் இருந்து செல்போனை பிடுங்கி, வர்ஷா படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டதாக தெரிகிறது. மேலும் 10-ம் வகுப்பு தேர்வு முடிந்த பின்னர் செல்போனை மகளிடம் தருமாறு கூறியுள்ளார். இதனால் வெறுப்படைந்த வர்ஷா 2 நாட்களாக யாரிடமும் பேசாமலும், சாப்பிடாமலும் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உறவினர்கள் சோகம்
இரவு 8 மணி அளவில் ரூபினிப்ரியா வீட்டுக்கு வந்து பார்த்தபோது வர்ஷா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தார். இதுபற்றி நம்பியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்போனை தாய் பிடுங்கிக்கொண்டதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.