கிருஷ்ணகிரி
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
|போச்சம்பள்ளி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
மத்தூர்
போச்சம்பள்ளி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
வேறு நபருடன் பழக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேடர்தட்டக்கல் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி ஸ்ரீவித்யா (வயது 27). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. புகழேந்தி ஆந்திர மாநிலத்தில் ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ரீ வித்யாவிற்கும், போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த தினகரன் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்தது. மேலும் ஸ்ரீவித்யா அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நபர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.
பெண் தற்கொலை
இதனால் மனமுடைந்த ஸ்ரீவித்யா அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கிணற்றில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமணமான 5 ஆண்டில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.