< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓடும் ரெயில் முன் பாய்ந்து தாய், 2 குழந்தைகள் தற்கொலை

தினத்தந்தி
|
7 March 2023 12:15 AM IST

ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறில் தாய், 2 குழந்தைகளுடன் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறில் தாய், 2 குழந்தைகளுடன் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லாவி மேட்டு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்மு (34). இவர்களுக்கு சுபிக்சா (7), பீஷ்மர் (4), ரேண்டி ஆர்டன், நிலமாறன், சுஜிக்சா என்ற 5 குழந்தைகள் இருந்தனர். சுரேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் வேலைக்கு சென்று கிடைக்கும் பணத்தை மது குடித்து செலவு செய்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அம்மு, தனது குழந்தைகள் சுபிக்சா, பீஷ்மர் ஆகிய 2 பேரையும் அழைத்து கொண்டு வீட்டின் அருகில் உள்ள சேலம்-சென்னை ரெயில்வே தண்டவாள பாதைக்கு நேற்று சென்றார்.

ரெயில் முன் பாய்ந்தனர்

அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. மனதை கல்லாக்கி கொண்ட அம்மு, 2 குழந்தைகளுடன் ஓடும் ரெயில் முன் பாய்ந்தார். இதில் ரெயிலில் அடிபட்டு 3 பேரும் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் ரெயில் தண்டவாளத்தில் 3 பேர் உடல் சிதறி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கல்லாவி போலீஸ் நிலையத்திற்கும், மொரப்பூர் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் அம்முவின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உறவினர்கள் கதறல்

அதன்பேரில் அம்முவின் குடும்பத்தினர், உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பலியாகி கிடந்த 3 பேரின் உடல்களை கண்டு கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இதைத்தொடர்ந்து பலியான 3 பேரின் உடல்களையும், போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கல்லாவி போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சுரேசிற்கும், அவரது மனைவி அம்முவிற்கும் இடையே தினமும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததும், இதனால் மனமுடைந்த அவர் தனது 2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக மொரப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோகம்

ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறில் தாய், 2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி யில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்