< Back
மாநில செய்திகள்
கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
19 Dec 2022 12:15 AM IST

ஓசூரில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர்களது அறையில் இருந்து உருக்கமான கடிதம் சிக்கியது.

ஓசூர்

ஓசூரில் கணவன்-மமனவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது அறையில் இருந்து உருக்கமான கடிதம் சிக்கியது.

தனியார் நிறுவன ஊழியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பேஸ்- 10 பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 57). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கலைவாணி (42). இவர்களது மகள் சரண்யா (23), மகன் பிருத்வி (21). சரண்யாவிற்கு திருமணமாகிவிட்டது. பிருத்வி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மகன் பிருத்வியுடன் மாதேஸ்வரன், கலைவாணி சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர்கள் எழுந்து வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிருத்வி அறைக்கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

விஷம் குடித்து தற்கொலை

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மாதேஸ்வரன், கலைவாணி ஆகிய 2 பேரும் இறந்து கிடந்தனர். கட்டிலில் மாதேஸ்வரனும், தரையில் கலைவாணியும் பிணமாக கிடந்தனர். அவர்கள் அருகில் விஷபாட்டில், 2 டம்ளர்கள் இருந்தன.

கணவன்-மனைவி 2 பேரும் தண்ணீரில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கமான கடிதம் சிக்கியது

தொடர்ந்து அவர்களின் அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் தனது மனைவிக்கு உடல் நல பாதிப்பு இருப்பதாகவும், தனது மகனுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து டவுன் போலீசார் கூறுகையில், மாதேஸ்வரன் தனது பிள்ளைகளுக்கு தேவையான பண உதவிகளை செய்து கொடுத்து அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர எண்ணினார். ஆனால் அவ்வாறு முடியவில்லை. மேலும் கலைவாணியின் வழியில் அவர்களுக்கு சொத்து கிடைப்பதிலும் தாமதமாகி கொண்டு போனது. இதைத் தவிர கலைவாணிக்கும் உடல் நலம் பாதிப்பு இருந்தது. இதனால் மகனுக்கு பாரமாக இருக்க வேண்டாம் என முடிவு செய்து அவர்கள் தற்கொலை செய்து உள்ளார்கள் என்று கூறினர்.

ஓசூரில், தனியார் நிறுவன ஊழியர் தனது மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்