< Back
மாநில செய்திகள்
அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி
மாநில செய்திகள்

அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
6 Nov 2022 12:15 AM IST

தர்மபுரியில் அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் இருந்து கடிதம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரியில் அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் இருந்து கடிதம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூக்கில் தொங்கிய மாணவர்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். லாரி டிரைவர். இவருடைய மகன் இளம்பரிதி (வயது 21). இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

நேற்று மாலை விடுதியில் உள்ள ஒரு அறையில் மாணவர் படித்து கொண்டு இருந்ததாக தெரிகிறது. அந்த அறைக்குள் இருந்து நீண்ட நேரம் ஒரே பாடல் ஒலித்து கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற மாணவர்கள் சந்தேகம் அடைந்து அறையின் கதவை தட்டினார்கள். அப்போது அந்த அறையின் உள்பக்கம் பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.

தற்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் விடுதி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். மாணவர் இளம்பரிதி மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். 3 துண்டுகளை இணைத்து அதனை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர் இளம்பரிதியின் உடலை கைப்பற்றி சக மாணவர்கள் மற்றும் விடுதி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள். தகவல் அறிந்த தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர் விடுதிக்கு வந்து நடந்த சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.

கடிதம் சிக்கியது

மாணவர் இளம்பரிதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் ஒரு கடிதம் சிக்கியது. அதை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

அதில் என்னால் நன்றாக படிக்க முடியவில்லை. நல்ல டாக்டராக வரமுடியுமா? என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை எழுதியது இளம்பரிதிதானா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணை

மாணவர் தற்கொலை குறித்து தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவரின் உடலை பார்த்து கதறி அழுதனர். மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதி அறையில் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்