< Back
மாநில செய்திகள்
ஊஞ்சலூர் அருகே பரிதாபம்: 9 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோடு
மாநில செய்திகள்

ஊஞ்சலூர் அருகே பரிதாபம்: 9 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
28 Sept 2022 1:45 AM IST

ஊஞ்சலூர் அருகே 9 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே 9 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கர்ப்பிணி

ஊஞ்சலூர் அருகே உள்ள வெள்ளோட்டம் பரப்பை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி ஜெயமணி. இவர்களுடைய மகள் சத்யா (வயது 25).

சிவகிரி அருகே உள்ள சுல்லிப்பரப்பை சேர்ந்த சஞ்சய் அருள் என்பவருக்கும், சத்யாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து சத்யா கர்ப்பமானார். கடந்த 3 மாதத்துக்கு முன்பு சத்யாவுக்கு பெற்றோர் வளைகாப்பு நடத்தி தங்களுடைய வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.

மருத்துவமனைக்கு செல்ல...

இதற்கிடையே சஞ்சய் அருள் வெளிநாடு வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்துகொண்டு இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சத்யாவின் தாய் ஜெயமணி மருமகன் சஞ்சய் அருளுக்கு போன் செய்து, 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் சத்யாவை பரிசோதனைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும். அதனால் கார் எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு சஞ்சய் அருள் எனக்கு இப்போது உடல்நிலை சரியில்லை. நாளைக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதை தாய் சொல்ல கேட்ட சத்யா கோபமடைந்து வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்றுவிட்டார்.

தூக்்கில் தொங்கினார்

சிறிது நேரம் கழித்து பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்கள். அப்போது சத்யா மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்குவது தெரிந்தது. உடனே பதறி அடித்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள் பின்னர் சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சத்யா இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மலையம்பாளையம் போலீசார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணை

கணவர் பரிசோதனைக்கு தன்னை அழைத்து செல்ல வரவில்லை என்று அறிந்ததும் கோபப்பட்டு அறைக்குள் சென்ற சத்யா, வாழ்க்கையில் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்