தர்மபுரி
2 குழந்தைகளை கிணற்றில் வீசிகொன்று தாய் தற்கொலை
|மாரண்டஅள்ளி அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குடும்ப தகராறு
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தொட்டபாவலி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், விவசாயி. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். இவருடைய மனைவி லட்சுமி (வயது 27). இவர்களுக்கு பிரசாந்த் (4) என்ற மகனும், 6 மாதத்தில் லதா என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.
கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சுமி தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் லட்சுமி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று இருப்பார் என்று கருதி மணிகண்டன், தன்னுடைய மாமனார் வீட்டுக்கு போன் செய்துள்ளார். அங்கு லட்சுமி செல்லவில்லை என்று கூறியுள்ளனர்.
கிணற்றில் பிணங்கள்
இந்தநிலையில் நேற்று மாலை கிராம மக்கள், மணிகண்டனின் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அங்குள்ள கிணற்றில் லட்சுமி மற்றும் 6 மாத குழந்தை பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்்து கூச்சலிட்டனர். தகவல் அறிந்த மணிகண்டன் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு கிணற்றுக்கு ஓடி வந்தனர். அங்கு அவர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
தகவல் அறிந்து மாரண்டஅள்ளி போலீஸ் மற்றும் பாலக்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். கயிறு கட்டி 2 பேரின் உடல்களையும் மீட்டனர். அங்கு திரண்டு இருந்த லட்சுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.
சோகம்
தொடர்ந்து தீயணைப்பு படையினர் 4 வயது சிறுவனின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். மீட்கப்பட்ட 3 உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப தகராறில் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று லட்சுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.