< Back
மாநில செய்திகள்
பிளஸ்-2 மாணவர் தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பிளஸ்-2 மாணவர் தற்கொலை

தினத்தந்தி
|
7 Aug 2022 10:56 PM IST

ஊத்தங்கரை அரசு விடுதியில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அரசு விடுதியில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தொட்டிமடுவு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 17). இவர் ஊத்தங்கரை அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதியில் தங்கி ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் விடுதியில் கேபிள் வயரில் கோபாலகிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு, ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின், சப்-கலெக்டர் அமீது பாஷா, தாசில்தார் கோவிந்தராஜ் ஆகியோர் விடுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து மாணவரின் தந்தை ஆனந்தன் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சுமித்ரா மற்றும் போலீசார் விடுதிக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

பிரேத பரிசோதனை

மாணவர் தற்கொலை தொடர்பாக விடுதி வார்டன், சக மாணவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவரின் உடல் நேற்று ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக ஊத்தங்கரை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி மற்றும் விடுதி பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மாணவர் சாவு குறித்து போலீசார் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

மாணவர் கோபாலகிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். ஊத்தங்கரை அரசு ஆண்கள் பள்ளியில் பிளஸ்-2 அறிவியல் பிரிவில் படித்து வந்தார். அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி அறையில் கோபாலகிருஷ்ணனுடன் மொத்தம் 16 மாணவர்கள் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் விடுதி மாணவர்கள் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று இரவு உணவு சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அறைக்கு வந்த போது தான் கோபாலகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். தற்கொலைக்கு டி.வி. கேபிள் வயரை பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும், கோபாலகிருஷ்ணனின், தாத்தா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். அப்போது முதல் மன வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். மேலும் ஏற்கனவே 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்றதும், தற்போது 3-வது முறையாக தற்கொலைக்கு முயன்றதில் உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்