< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரியில்பிரபல நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைவணிகர்கள் கடைகள் அடைப்பு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரியில்பிரபல நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைவணிகர்கள் கடைகள் அடைப்பு

தினத்தந்தி
|
14 Oct 2023 12:30 AM IST

கிருஷ்ணகிரியில் பிரபல நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு இரங்கல் தெரிவித்து வணிகர்கள் கடைகளை அடைத்தனர்.

கிருஷ்ணகிரியில் பிரபல நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு இரங்கல் தெரிவித்து வணிகர்கள் கடைகளை அடைத்தனர்.

பிரபல நகைக்கடை அதிபர்

கிருஷ்ணகிரி சென்டிரல் தியேட்டர் அருகே உள்ள காந்தி நகரில் வசித்து வந்தவர் எம்.பி.சுரேஷ் (வயது 55), பிரபல நகைக்கடை அதிபர். இவர் கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் நகைக்கடை நடத்தி வந்ததோடு, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

மேலும் கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர் சங்கத்தலைவராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் சுரேஷ் வீட்டில் தனது அறையில் இருந்தார். வீட்டில் உள்ளவர்கள் மற்ற அறைகளில் இருந்தனர். அப்போது சுரேஷ் தங்கி இருந்த அறையில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அவரது அறைக்கு ஓடி சென்று பார்த்தனர். அப்போது சுரேஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அருகே அவரது துப்பாக்கியும் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மனோகரன் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் எம்.பி.சுரேஷ் தான் உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியால் கழுத்து பகுதியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நகைக்கடை அதிபர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும் வணிகர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் அவரது வீட்டுக்கு அருகே திரண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் அங்கு சென்று தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர்.

கடைகள் அடைப்பு

நகைக்கடை அதிபர் எம்.பி.சுரேஷ் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? அல்லது பண விவகாரத்தில் ஏதேனும் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்தாரா? என கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எம்.பி.சுரேஷ் மரணம் அடைந்ததை தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து வணிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து நேற்று கடைகளை அடைத்தனர். இதனால் கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை, பெங்களூரு சாலை, காந்தி ரோடு, சேலம் சாலை, சப்-ஜெயில் சாலை என பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதனால் கிருஷ்ணகிரியில் நேற்று பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

மேலும் செய்திகள்