சேலம்
சேலம் அருகே கள்ளக்காதலியை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை
|சேலம்
சேலம் அருகே கள்ளக்காதலியை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கணவரை பிரிந்து...
சேலத்தை அடுத்துள்ள சேலத்தாம்பட்டி கருப்பனூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). இவருடைய மனைவி அமுதா (42). இவர்களுக்கு சந்தியா (24) என்ற மகளும், விஜய் (22), பிரகாஷ் (19) என்ற 2 மகன்களும் உள்ளனர். சந்தியாவுக்கும், விஜய்க்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்கள் தனிக்குடித்தனமாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமுதா கணவரை பிரிந்து இளைய மகன் பிரகாசுடன் வசித்து வந்தார். அமுதா வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது பெரிய புதூரை சேர்ந்த தங்கராஜ் (37) என்ற தொழிலாளியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
திருமணம் ஆகாதவரான தங்கராஜ், கடந்த சில மாதங்களாக அமுதாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு அமுதாவின் வீட்டுக்கு தங்கராஜ் வந்ததாக கூறப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில் பெண் பிணம்
இந்த நிலையில் இரவு வேலைக்கு சென்றிருந்த அமுதாவின் மகன் பிரகாஷ் நேற்று காலையில் வீட்டுக்கு திரும்பினார். அவர் நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவு உள்பக்க தாழ்ப்பாள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு அமுதாவின் மார்பு மற்றும் வயிறு பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகே தங்கராஜூம் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே விஷமருந்து பாட்டிலும், அமுதாவின் உடல் அருகே காய்கறி நறுக்கும் கத்தியும் ரத்தக்கறையுடன் கிடந்தன.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், அவர்கள் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த ரத்தக்கறை படிந்த கத்தி, விஷ பாட்டில்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
போலீசார் விசாரணை
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அமுதாவின் வீட்டுக்கு வந்த தங்கராஜிக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றி இருக்கலாம். இதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ், அங்கிருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து அமுதாவின் கழுத்தில் சரமாரியாக குத்திக்கொன்று விட்டு அங்கிருந்த விஷ பாட்டிலை எடுத்து விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
மேலும் சம்பவம் குறித்து அமுதாவின் இளைய மகனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அமுதாவிற்கும், தங்கராஜிக்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்து வந்ததாகவும், அதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவும் அவர்கள் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டு தங்கராஜ் அமுதாவை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.