< Back
மாநில செய்திகள்
அதிக வீட்டு பாடங்களை ஆசிரியர்கள் கொடுத்ததால்10-ம் வகுப்பு மாணவன் தற்கொலைபோலீசார் விசாரணை
சேலம்
மாநில செய்திகள்

அதிக வீட்டு பாடங்களை ஆசிரியர்கள் கொடுத்ததால்10-ம் வகுப்பு மாணவன் தற்கொலைபோலீசார் விசாரணை

தினத்தந்தி
|
22 Aug 2023 1:30 AM IST

சேலம்

சேலத்தில் அதிக வீட்டு பாடங்களை ஆசிரியர்கள் கொடுத்ததால் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

பள்ளி மாணவன்

சேலம் சின்னதிருப்பதி பிரபு நகரை சேர்ந்தவர் மதன் கிருஷ்ணன். கார் டிரைவர். இவரது மகன் சாரதி (வயது 16). இவன் மரவனேரியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். 10-ம் வகுப்பு என்பதால் பள்ளியில் மாணவனுக்கு கூடுதல் வீட்டுப்பாடங்களை ஆசிரியர்கள் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதை மாணவன் சரியாக எழுதாமலும், படிக்காமலும் இருந்து வந்ததாக தெரிகிறது. இதை பள்ளியில் ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த மாணவன், பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் வீட்டில் இருந்து வந்தான்.

தற்கொலை

இதனிடையே, மாணவனின் பெற்றோரும் 10-ம் வகுப்பு படித்து முடியும் வரை சற்று கஷ்டமாகத்தான் இருக்கும். அதை பொறுத்துக்கொண்டு பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். இருப்பினும் அதை கேட்க அவனுக்கு மனமில்லை. பள்ளிக்கு சென்றால் வீட்டு பாடங்களை ஏன் படிக்கவில்லை என்று ஆசிரியர்கள் திட்டுவார்களே? என்ற பயத்தில் இருந்து வந்தான்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மரவனேரியில் உள்ள பாட்டி வீட்டிற்கு மாணவனின் பெற்றோர் சென்றனர். அப்போது, வீட்டில் தனியாக இருந்த மாணவன் சாரதி, சமையல் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் தொங்கினான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்