< Back
மாநில செய்திகள்
நங்கவள்ளி அருகே 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலைடி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோர் திட்டுவார்கள் என கருதி விபரீதம்
சேலம்
மாநில செய்திகள்

நங்கவள்ளி அருகே 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலைடி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோர் திட்டுவார்கள் என கருதி விபரீதம்

தினத்தந்தி
|
7 Aug 2023 1:36 AM IST

மேச்சேரி

டி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோர் திட்டுவார்கள் என கருதி 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நங்கவள்ளி அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

7-ம் வகுப்பு மாணவி

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பாசக்குட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45), கூலித்தொழிலாளி. இவருக்கு ரூபிணி என்ற மனைவியும், கவியரசி (13), பிரபா (10) என்ற 2 மகள்களும் இருந்தனர். நங்கவள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் கவியரசி 7-ம் வகுப்பும், பிரபா 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பள்ளி விடுமுறை என்பதால் அக்காள், தங்கை இருவரும் வீட்டில் இருந்தனர். அவர்கள் மாலையில் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது கவியரசிக்கும், தங்கை பிரபாவிற்கும் டி.வி. பார்ப்பதற்கு ரிமோட்டை எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் கவியரசி டி.வி. ரிமோட்டை உடைத்ததாக கூறப்படுகிறது. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோர் வீட்டுக்கு வந்தவுடன் திட்டுவார்களே என அவர் பயந்து போனார். இதையடுத்து அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்தார்.

மாணவி வீட்டின் தனி அறையில் மரச்சட்டத்தில் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே அவருடைய தங்கை இதை பார்த்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து நங்கவள்ளி போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இந்த சம்பவம் குறித்து நங்கவள்ளி போலீசில் இறந்து போன கவியரசின் தந்தை சக்திவேல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோர் திட்டுவார்கள் என கருதி 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நங்கவள்ளி அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்