< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரியில் படிக்குமாறு கூறியதால்ஆசிரியர் தம்பதியின் மகன் தற்கொலை
சேலம்
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரியில் படிக்குமாறு கூறியதால்ஆசிரியர் தம்பதியின் மகன் தற்கொலை

தினத்தந்தி
|
4 Aug 2023 1:20 AM IST

கன்னங்குறிச்சி

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரியில் படிக்குமாறு கூறியதால் ஆசிரியர் தம்பதியின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

ஆசிரியர்கள்

சேலம் கன்னங்குறிச்சி வெங்கடேஷ்வரா 2-வது தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி பத்மாவதி. இவர்கள் 2 பேரும் தாரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகன் விஜய் கார்த்திக் (வயது 19). தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படிக்க விரும்புவதாக பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது.

அதற்கு அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரியில் படிக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் விஜய் கார்த்திக் மனமுடைந்து காணப்பட்டார். இதனிடையே நேற்று ஆசிரியர் தம்பதி கோவிலுக்கு சென்று விட்டு பின்னர் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்போடப்பட்டு இருந்தது. அவர்கள் கதவை தட்டியும் திறக்கவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது விஜய் கார்த்திக் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் போலீசார் விஜய் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் படிக்குமாறு பெற்றோர் கூறியதால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்