நாமக்கல்
ராசிபுரத்தில்தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்தது ஏன்?உருக்கமான தகவல்கள்
|ராசிபுரம்:
ராசிபுரத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தி.மு.க. கவுன்சிலர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பொம்மி தெருவை சேர்ந்தவர் அருண்லால் (வயது 43). நகர தி.மு.க. செயலாளர். நகைக்கடையும் நடத்தி வந்தார். இவருடைய மனைவி தேவி பிரியா (41). இவர் ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்தார்.
இவர்களுக்கு ரித்திகா ஸ்ரீ (21), மோனிஷா 17 என்ற 2 மகள்கள் இருந்தனர். இதில் ரித்திகா ஸ்ரீ பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மோனிகா ஸ்ரீ பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவிபிரியா, கணவர் அருண்லால், இளைய மகள் மோனிகா ஸ்ரீ ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.
இதய அறுைவ சிகிச்சை
இதுகுறித்து ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சம்பவத்தன்று இரவு ரோஸ் மில்கில் மோனிகா ஸ்ரீ-க்கு விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து விட்டு பின்னர் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மூத்த மகள் ரித்திகா ஸ்ரீ-க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகவும், அவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை நடந்தது. இதற்காக ரூ.18 லட்சம் வரை செலவு செய்ததாக தெரிகிறது. மேலும் அருண்லால் நகைக்கடையில் போதிய வருமானமின்றி கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தொடர் விசாரணை
இதனால் குடும்பத்தில் கடன் தொல்லை ஏற்பட தொடங்கியது. எனினும் தங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினையை அருண்லால் வெளிகாட்டி காட்டவில்லை. எனவே கடன் பிரச்சினையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது மனைவி, மகளுக்கு உடல்நிலை பாதித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனரா? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.