< Back
மாநில செய்திகள்
பாலியல் அரக்கன்களும்... பரிதவிக்கும் குழந்தைகளும்....
சிவகங்கை
மாநில செய்திகள்

பாலியல் அரக்கன்களும்... பரிதவிக்கும் குழந்தைகளும்....

தினத்தந்தி
|
20 Nov 2022 12:15 AM IST

சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இதுகுறித்து கலெக்டர்கள், அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகள் குறித்த விவரம்.

சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து விட்டன. பிறந்த பெண் குழந்தை முதல் 90 வயதான மூதாட்டி வரை நாட்டில் பல்வேறு இடங்களில் பாலியல் குற்றங்கள் அரங்கேறி உள்ளன. பள்ளி செல்லும் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளும் கூட நம்பிக்கைக்குரியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கொஞ்சி விளையாடக்கூடிய சின்னஞ்சிறிய பெண் குழந்தைகளையும், பள்ளி செல்லும் சிறுமிகளையும் பாலியல் அரக்கன்கள் சீரழித்து விடுகின்றனர். இந்த கொடுமையை வெளியே சொல்ல முடியாத நிலையில் பரிதவிக்கும் குழந்தைகளும் உள்ளனர். இது போன்ற குழந்தைகள் இந்த கொடுமையில் இருந்து தைரியமாக வெளியே வரவும், இது போன்ற சம்பவங்கள் அவர்களுக்கு நடைபெறாமல் இருப்பதற்காகவும் அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினம் என்பதால் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் பள்ளி குழந்தைகளை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அழைத்து சென்று, பாலியல் குற்றங்களில் இருந்து தப்பிப்பது பற்றியும், அது பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட போலீஸ் நிலையங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பது குறித்து கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி:-

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தொடர்பாக சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் நல பாதுகாப்பு குழு, மாவட்ட சமூக நலத்துறை மூலமாக பள்ளிகளில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தொடுதல் குறித்து மாணவிகளுக்கு கற்றுத்தரப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான தொந்தரவுகள் ஏற்பட்டால் அவர்கள் அரசுக்கு அச்சமின்றி தகவல் தெரிவிப்பதற்காக 1098 என்ற இலவச தொலைபேசி எண் உள்ளது.

இந்த தொலைபேசி எண் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தில் பொது இடங்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செய்து வருகிறது என்று கூறினார்.

குண்டர் சட்டத்தில் கைது

சிவகங்கைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார்:-

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை ஒட்டி பள்ளி குழந்தைகளை மகளிர் போலீஸ் நிலையங்களுக்கு அழைத்து வந்து பெண் குழந்தைகள் படிக்க வேண்டிய அவசியம், படிப்பதனால் எந்த அளவிற்கு உயர்வு பெறலாம், எந்தெந்த வேலைக்கு செல்லலாம் என்பது குறித்து போலீசார் விளக்கினார்கள். மேலும் இளம் வயதில் தவறான பழத்தினால் 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் வீட்டை விட்டு ஓடி சென்று எந்தெந்த வகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் வெளிநபர்கள் கொடுக்கும் செல்போன் போன்றவைகளை வாங்கக்கூடாது என்றும், அவைகளை தவறாக பயன்படுத்தி புகைப்படங்கள் அனுப்புவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது.

பாலியல் தொடர்பான தொந்தரவுகள் ஏற்படும் போது தயக்கமின்றி 1098, 181 போன்ற கட்டணம் இல்லாத தொலைபேசிகளில் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே அடுத்தடுத்து தவறு செய்வதற்கு பயப்படுவார்கள். மேலும் குழந்தை திருமணம் செய்யக்கூடாது என்பது குறித்தும் பெற்றோருக்கும் எடுத்து கூறப்பட்டது. குழந்தைகள் நல குழுவினருடன் சேர்ந்து குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒவ்வொரு பள்ளிகளாக சென்று மாணவிகளை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். தவறான தொடுதல் என்றால் என்ன? அவ்வாறு செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் மாணவிகளுக்கு கற்று தரப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்றார்.

குற்றங்கள் அதிகரிப்பு

குழந்தைகள் நலக்குழு தலைவர் சாந்தி:-

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக கலெக்டரின் நேரடி கட்டுப்பாட்டில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம், குழந்தைகள் நலக்குழு சமூக நலத்துறை மற்றும் குழந்தை தொழிலாளர் மீட்பு பிரிவு ஆகிய பிரிவுகள் உள்ளன. கலெக்டரின் உத்தரவின் பேரில் குழந்தைகள் நலக்குழு மூலமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாலியல் தொல்லை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுத்தல் போன்றவை குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக பள்ளிகள் மற்றும் குழந்தைகள் தங்கி உள்ள இல்லங்கள் போன்றவைகளில் விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் தொடர்பாக கிராமங்களில்தான் இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. கிராமங்களை பொறுத்தவரை குடும்ப சூழல் காரணமாகத்தான் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. கொரோனாவுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்