கனியாமூர் பள்ளியை மீண்டும் இயக்க ஆலோசனை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
|வன்முறை நிகழ்ந்த கனியாமூர் பள்ளியை இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த 4 நாட்களாக மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நேற்றுமுன்தினம் மாணவர் அமைப்பினர், இளைஞர்கள் போராட்டம் நடத்தி பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மாணவி ஸ்ரீமதியின் வேதியியல் ஆசிரியையான ஹரிப்பிரியா (வயது 40), கணித ஆசிரியை கீர்த்திகா (28) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். கீர்த்திகா விடுதியின் பொறுப்பாளராகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், சென்னை முகப்பேரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பள்ளி வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்களின் நலன்கருதி என்ன செய்யலாம் என ஒரு வாரத்தில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறை நிகழ்ந்த கணியாமூர் பள்ளியை இயக்குவது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்றார்.
இதனிடையே சூறையாடப்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் , வருமான சான்றிதழ்களை தாமதம் இன்றி வழங்க அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.