< Back
மாநில செய்திகள்
மேலூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கட்டுக்கட்டாக ஏற்றுமதியாகும் கரும்புகள்
மதுரை
மாநில செய்திகள்

மேலூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கட்டுக்கட்டாக ஏற்றுமதியாகும் கரும்புகள்

தினத்தந்தி
|
3 Oct 2022 1:22 AM IST

தசரா பண்டிகைக்காக மேலூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கட்டுக்கட்டாக கரும்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது

மேலூர்

தசரா பண்டிகைக்காக மேலூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கட்டுக்கட்டாக கரும்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கரும்புகள்

மதுரை மாவட்டத்தில் மேலூர் தாலுகாவில் தான் அதிகளவு கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தனியாமங்கலம், சருகுவலையபட்டி, கீழவளவு, நாவினிப்பட்டி, சுக்காம்பட்டி, சூரக்குண்டு, எட்டிமங்கலம் பகுதியில் அதிக அளவில் கரும்பு பயிர் செய்யப்படுகிறது.

மேலூரில் இருந்து டெல்லி, மும்பை, குஜராத், ஆந்திரா, பெங்களூரு போன்ற வெளி மாநிலங்கள், தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, சிவகாசி, சாத்தூர் போன்ற பகுதிகளுக்கும் கரும்பு சப்ளை செய்யப்படுகிறது.

சுவை மிக்கது

பெரியாறு வைகை பாசனத்தின் கடைமடை பகுதி மேலூர் தாலுகா ஆகும். இப்பகுதியில் உள்ள வண்டல் மண் படிவத்தினால் பொங்கல் கரும்புகள் உயரமாக வளர்ச்சியடைகின்றன. மேலும் இந்த கரும்புகள் அதிக இனிப்பு தன்மையுடன் இருக்கும். இதனால் தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் மேலூர் கரும்புகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். தற்போது தசரா பண்டிகை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம் உட்பட்ட பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக மேலூர் பகுதியில் இருந்து கரும்புகள் அதிக அளவில் லாரிகளில் ஏற்றுமதியாகி வருகிறது.

விலை குறைந்து விட்டது

இதுகுறித்து திருவாதவூரை சேர்ந்த கரும்பு விவசாயி கருப்பு என்ற சின்னக்கருப்பன் கூறியதாவது:-

மேலூர் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் கரும்பின் சுவை அதிகம் என்பதால், இப்பகுதியில் விளையும் கரும்புகளை வாங்க பயிரிடும்போதே வியாபாரிகள் முன்பணம் கொடுத்து விடுகின்றனர். 15 கரும்புகள் கொண்டது ஒரு கட்டு. ஒரு மாட்டு வண்டிக்கு 20 கட்டுகளும், லாரிக்கு 300 கட்டுகளும், டாரஸ் லாரிக்கு 450 கட்டுகளும் ஏற்றப்படுகின்றன. கடந்த ஆண்டு 300 கரும்புகள் ரூ.6000-க்கு விற்றன. இந்த ஆண்டு ரூ.5000 முதல் ரூ.5800 வரை விற்பனை விலை குறைந்து விட்டது.

தசரா பண்டிகைக்காக மேலூர் பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தற்போது லாரிகளில் கரும்பு ஏற்றுமதி தீவிரமடைந்து உள்ளது.

மேலும் செய்திகள்