பெரம்பலூர்
தலைமை செயலகத்தை முற்றுகையிட கரும்பு விவசாயிகள் முடிவு
|தலைமை செயலகத்தை முற்றுகையிட கரும்பு விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
பெரம்பலூரில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் தலைவர் சக்திவேல் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு அரசு அறிவித்தபடி கரும்பு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கக்கோரி வருகிற 17-ந்தேதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டும். டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதி டெல்லியில் நடைபெறவுள்ள பேரணியில் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு கரும்பு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையை வழங்க கோரி ஏப்ரல் 6-ந்தேதி நாடாளுமன்றம் முன்பு நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திலும் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.