கள்ளக்குறிச்சி
தண்ணீர் இன்றி கருகி வரும் கரும்பு பயிர்
|பிரம்மகுண்டத்தில் தண்ணீர் இன்றி கரும்பு பயிர்கள் கருகி வருகின்றன. இதை தவிர்க்க பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு,
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது பிரம்மகுண்டம் கிராமம். இப்பகுதியில் கிணற்று பாசனம் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயிகள் பெரும் செலவு செய்து கரும்பு பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாய பயன்பாட்டுக்காக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி கடந்த 15 நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் மின்வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டதால் விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டார்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்த பின்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
நடவடிக்கை
இதனால் கரும்பு பயிர்கள் தற்போது தண்ணீரின்றி காய்ந்து கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மின்மாற்றி பழுதால் எங்களது கிணற்றில் இருந்து கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதன் காரணமாக பயிர்கள் தற்போது காய்ந்து கருகி வருகிறது. இதேபோல் நெல் உள்ளிட்ட பயிர்களும் கருகி வருவதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க பழுதான மின்மாற்றியை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.