< Back
மாநில செய்திகள்
திருக்கோவிலூர் அருகேசர்க்கரை ஆலை அலுவலகத்தை சூறையாடி ஊழியர்கள் மீது தாக்குதல்15 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

திருக்கோவிலூர் அருகேசர்க்கரை ஆலை அலுவலகத்தை சூறையாடி ஊழியர்கள் மீது தாக்குதல்15 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
20 March 2023 12:15 AM IST

திருக்கோவிலூர் அருகே சர்க்கரை ஆலை அலுவலகத்தை அடித்து சூறையாடி, ஊழியர்களை தாக்கிய 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருக்கோவிலூர்,

கரும்பு வெட்ட தொழிலாளர்கள் வரவில்லை

திருக்கோவிலூர் அருகே வேங்கூரில் தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு தற்போது அரவைப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலைக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகளுக்கு உரிய காலத்துக்குள் கரும்புகளை வெட்ட நிர்வாகம் சார்பில் ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தொழிலாளர்கள், வெட்டு ஆணை பெற்ற விவசாயிகளின் வயல்களுக்கு சென்று கரும்புகளை வெட்டவில்லை. இதனால் கரும்புகள் வெயிலில் காய்ந்து, எடை குறைந்து வருகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆலை நிர்வாகத்திடம் இதுபற்றி முறையிட்டனர். அப்போது ஆலை நிர்வாகம் கரும்பு வெட்ட தொழிலாளர்களை அனுப்பி வைப்பதாக கூறியது. இதை ஏற்ற விவசாயிகள் அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஆனால் கரும்பு வெட்ட தொழிலாளர்கள் வரவில்லை.

அலுவலகம் சூறை

இதனால் ஆத்திரம் அடைந்த கனகநந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட கும்பல், சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள கோட்ட கரும்பு அலுவலகத்துக்குள் புகுந்து அங்கு இருந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை சரமாரியாக அடித்து, உதைத்ததுடன், அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் உடைத்து சூறையாடினர். மேலும் கரும்பு விவசாயிகளின் ஆவணங்களையும் கிழித்தெறிந்தது. பின்னர் அந்த கும்பல் அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் அடித்து உடைத்தது. இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியே தப்பி ஓடினர். அவர்களையும் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி தாக்கிவிட்டு, தப்பி ஓடியது. இதுகுறித்து ஆலையின் கரும்பு உதவி மேலாளர் பரணிதரன் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருவதோடு, தப்பியோடிய 15 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்