< Back
மாநில செய்திகள்
திருவாரூரில், விற்பனைக்கு குவிந்த கரும்பு, மஞ்சள் கொத்துகள்
திருவாரூர்
மாநில செய்திகள்

திருவாரூரில், விற்பனைக்கு குவிந்த கரும்பு, மஞ்சள் கொத்துகள்

தினத்தந்தி
|
13 Jan 2023 12:30 AM IST

பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூரில் கரும்புக்கட்டுகள், மஞ்சள் கொத்துகள் விற்பனைக்கு குவிந்து உள்ளன.

திருவாரூர்;

பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூரில் கரும்புக்கட்டுகள், மஞ்சள் கொத்துகள் விற்பனைக்கு குவிந்து உள்ளன.

பொங்கல் பண்டிகை

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளில்விவசாயிகள் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடுவர். இந்த பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை பிடித்து இருப்பது கரும்பு, மஞ்சள்கொத்து, வாழைப்பழம்.பொங்கல் பண்டிகை தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே கரும்பு விற்பனைக்கு வரும். மஞ்சள்கொத்து, இஞ்சிகொத்து, வாழைத்தார் போன்றவை ஒரு வாரத்துக்கு முன்னதாக விற்பனைக்கு வரும். பொங்கல் பண்டிகையின் போது புதுமணத்தம்பதிகளுக்கு சீர் வரிசையாக பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களில் கரும்பு, மஞ்சள்-இஞ்சி கொத்து, வாழைத்தார் போன்றவை முக்கிய இடம் பிடிக்கும்.

கரும்பு, மஞ்சள்-இஞ்சி கொத்து

திருவாரூர் கடைவீதிக்கு மஞ்சள்கொத்து, இஞ்சி கொத்து வரத்து அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் தற்போது விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது. திருவாரூருக்கு மன்னார்குடி, திருக்காட்டுப்பள்ளி, சூரக்கோட்டை பகுதியில் இருந்து கரும்பு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது 10 கரும்புகள் கொண்ட 1 கட்டு கரும்பு, கரும்பின் அளவுக்கு ஏற்ப ரூ.200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.திருவாரூர் கடைவீதியில், நாகை சாலை, உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகள் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. மஞ்சள் கொத்து வரத்தும் அதிகரித்துள்ளது. கடைவீதியில் கடந்த ஆண்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ மஞ்சள் கொத்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ இஞ்சி கொத்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வாழைத்தார் விலை உயர்வு

திருவாரூரில் வாழைத்தார் விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த வாரம் வரை ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட வாழைத்தார் நேற்று ரூ.600-வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விலை உயர்ந்து காணப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் கரும்பு, மஞ்சள், இஞ்சி, வாழைத்தார் விற்பனை அதிகளவில் இருக்கும்.ஆனால் இந்த ஆண்டு விலையை கேட்டு விட்டு அவற்றை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் கடனுக்கு பணம் வாங்கி பொருட்கள் வாங்கிய வியாபாரிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். . வாழைத்தாரை பொருத்தவரையில் கடந்த வாரம் ஒரு சீப் பூவன் வாழை ரூ.20 வரை விற்பனையானது. ஆனால் நேற்று ஒரு சீப் வாழை ரூ.100 வரை விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு பொங்கல் விற்பனை சற்று மந்தமாக உள்ளது என வியாபாரிகள் கூறினர்.

மண் பானை விற்பனை மந்தம்

பொங்கல் தினத்தன்று புது மண்பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் நவீன யுகத்தில் உலோக பாத்திரங்களில் பொங்கல் வைக்கும் வழக்கம் ஊடுருவி விட்டது. இருப்பினும் கிராமப்புறங்களிலும் நகரத்திலும் இன்னும் இந்த பாரம்பரிய பழக்கம் வழக்கத்தில் உள்ளது. முன்பு பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பாகவே பொங்கல் பானை, சட்டி மற்றும் அடுப்பு தயாரிக்கும் பணி மும்பரமாக தொடங்கி நடைபெறும். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மன்னார்குடியில்மண்பானை சட்டி மற்றும் அடுப்பு விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இளம் தலைமுறையினர் மண்பானையில் சரியான பதத்தில் அரிசியை பொங்கலிட அனுபவம் இல்லாததால் மண்பானையில் பொங்கல் வைக்க அச்சம் அடைந்து உலோக பாத்திரங்களை நாடி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்