< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

தவிக்க வைக்கும் தங்கம்

தினத்தந்தி
|
6 Dec 2022 12:40 AM IST

தவிக்க வைக்கும் தங்கத்தை பற்றி பொதுமக்கள் கருத்து ெதரிவித்துள்ளனர்.

அனைவரின் வாழ்க்கையிலும் சரி, அரசாங்கங்களின் இயக்கங்களிலும் சரி, தங்கம் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது.

ஏழை எளியவர் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் தங்கத்தின் மீது தாளாத மோகம் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு குண்டுமணி தங்கம்கூட இல்லாமல் தமிழர்களின் இல்லங்களில் சுப, துக்க காரியங்கள் நடப்பது இல்லை.

அதே நேரத்தில் சாமானியர்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என எல்லோராலும் தங்கம் ஒரு லாபகரமான, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற இதரச் சொத்துகள் வீழ்ச்சி அடையக்கூடும். ஆனால் தங்கம் எப்போதும் முன்னணியிலேயே நிற்கும். நிதி நெருக்கடியா? தங்கத்தை அடகுவைத்து அல்லது விற்று உடனடியாக பணமாக்கிகொள்ள முடியும்.

விலை நிர்ணயம்

இந்தியாவுக்கு துபாய், லண்டன் போன்ற இடங்களில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. நமது நாட்டில் மும்பைதான் தங்க 'நெட்வொர்க்' மையமாக செயல்பட்டு வருகிறது. அங்கிருந்தே இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான தங்கம் 'சப்ளை' செய்யப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வது, 'லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேசன்'தான். ஒவ்வொரு நாளும் (விடுமுறை நாட்களை தவிர) காலை 10.30 மணிக்கும், மதியம் 3 மணிக்கும் அமெரிக்க டாலர்களில் இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை மையமாக வைத்தும், இன்சூரன்ஸ், இறக்குமதி வரி, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றையும் சேர்த்தும் அனைத்து நாடுகளிலும் விலை நிர்ணயம் ஆகிறது.

இந்தியாவில் மும்பையில்தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உலகச்சந்தையில் எப்படி காலை, மாலையில் விலை நிர்ணயிக்கப்படுகிறதோ, அதேபோல் இங்கும் விலை தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறாக விலை நிர்ணயம் செய்யப்படும் தங்கத்தின் விலை ஆண்டுக்காண்டு மேல்நோக்கியே பயணிக்கிறது.

ஏறுமுகத்தில் தங்கம் விலை

1920-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.21-க்கு விற்பனை ஆன நிலையில், 2001-ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 368 ஆகவும், 2011-ம் ஆண்டில் ரூ.22 ஆயிரத்து 104 ஆகவும் உயர்ந்துகொண்டே வந்தது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 416-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இல்லாத விலை உயர்வாக இது இன்றளவும் பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் விலை சற்று குறையத் தொடங்கி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 880-க்கு விற்கப்பட்டது.

இப்படியாக தொடர்ந்து தங்கம் விலை ரூ.36 ஆயிரத்திற்கும் ரூ.40 ஆயிரத்திற்கும் இடையில் இருந்துவந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷியா-உக்ரைன் இடையே போர் தொடங்கிய நேரத்தில், முதலீட்டாளர்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டினர். இதனால் அதன் விலையும் சற்று சரிந்து காணப்பட்டது. அதையடுத்து மீண்டும் தங்கத்தின் விலை பெருமளவில் ஏறுமுகத்திலேயே இருந்தது.

ஒரு பவுன் ரூ.40 ஆயிரம்

கடந்த மார்ச் மாதம் 7, 8, 9-ந் தேதிகளிலும், ஏப்ரல் மாதம் 14, 15, 16, 17, 18, 19-ந் தேதிகளிலும் ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. அதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டுவந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. கடந்த 2-ந் தேதியன்று மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் தங்கம் விலை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

பாதிப்பை ஏற்படுத்தாது

தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பு முதன்மை ஆலோசகர் சையது அகமது கூறும்போது, 'கொரோனா காலத்தில் எவ்வளவோ தொழில்கள் அடிபட்டன, சில தொழில்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டன. ஆனால் தங்க வியாபாரம் மட்டும் தலைநிமிர்ந்துதான் இருக்கிறது. இதற்கு மக்கள் தங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் முக்கியக் காரணம்.

ஒரு கிராம் தங்கம் ரூ.500 ஆக இருந்தபோதும் சரி, இப்போது ரூ.5 ஆயிரமாக இருக்கும்போதும் சரி, நகைகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்கிறது. எனவே இந்த விலை உயர்வு மக்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. தங்கத்துக்கான மவுசு எப்போதும் குறையாது'.

முதலீட்டை குறைக்க வேண்டும்

சிவகாசி இந்திராதேவி டேனியல்:- தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.400 விலை உயர்ந்து தற்போது ரூ.40 ஆயிரத்து 120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது முகூர்த்த நாட்கள் அதிக அளவில் உள்ள நிலையில் திருமணத்துக்காக நகை வாங்க செல்லும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

பெண் குழந்தைகள் உள்ள பல குடும்பங்கள் தங்க நகைகளை சிறுக, சிறுக வாங்கி சேமித்து வருகிறார்கள். நகைகளை சேமிக்கும் பழக்கம் அனைத்து தரப்பினரிடமும் உள்ளது. எனவே இனி வரும் காலத்திலும் தங்கம் விலை உயர தான் செய்யும்.

வியாபாரம் மந்தம்

விருதுநகர் நகை வியாபாரி கோபாலகிருஷ்ணன்:-

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதால் கடந்த 2 நாட்களாக கிராம் ரூ.5 ஆயிரமாக உயர்ந்து விட்டது. 24 கேரட் தங்கம் கிராம் ரூ.5,300 ஆக உள்ளது. தற்போது வியாபாரம் மந்தமாக இருந்தாலும் வரும் நாட்கள் விழா காலமாக உள்ளதால் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது. தற்போது பங்குச் சந்தையில் விலை குறைந்து வருவதால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

இல்லத்தரசி சுப்புலட்சுமி:- பெண்களிடம் தங்கத்திற்கு அதிக ஈர்ப்பு உள்ளது. வீட்டில் வருமானம் ஈட்டும் ஆண்கள் கவனிக்கா விட்டாலும், பெண்கள் வரும் வருமானத்தில் தங்கம் வாங்குவதில் அதிக கவனமாக இருப்பார்கள். அதற்கு காரணம் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுக்க தங்கம் சேர்க்க வேண்டியது அவசியமாகும். எனது திருமணத்தின் போது பவுன் ரூ.4 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது என் பெண்ணின் திருமணத்திற்கு பவுன் ரூ.40 ஆயிரத்திற்கு வாங்க வேண்டி உள்ளது. நல்ல வரன் வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 50 பவுன் நகை போட வேண்டிய நிலையில் திருமண பட்ஜெட்டில் நகைக்கு பெரும் தொகை செலவிட வேண்டிய நிலை உள்ளது. எனவே தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

பாளையம்பட்டி கீதாலட்சுமி:- 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் சேமித்து வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் எனது கணவர் கொடுத்த ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை சேர்த்து ரூ.25 ஆயிரத்திற்கு 8 பவுன் நகை வாங்கினேன். ஆனால் தற்போது நகை விற்கும் விலைக்கு ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் தங்க நகையை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது. தங்க நகை வாங்குவது கனவாகவே முடிந்து விடுகிறது. அட்சயதிருதி அன்று தங்கம் வாங்கினால் செல்வம் சேரும் எனக்கூறி தங்கத்தின் விலையை உயர்த்தி வைத்திருக்கிறார்கள். சிறுக, சிறுக பல ஆண்டுகள் சேமித்து வைத்து இருந்தாலும் சொற்ப அளவு தங்கம் தான் தற்போது வாங்க முடிகிறது.

ராஜபாளையம் கல்லூரி மாணவி வனஅரசி:- எங்களை போன்ற நடுத்தர வர்க்கத்தினரால் தங்கம் வாங்குவது மிகவும் கடினம் ஆகும். தங்கத்தின் விலையும், அதோடு கூடிய செய்கூலி, சேதாரமும் மிக அதிகமாக நிர்ணயிக்கப்படும் போது எங்களால் தங்கத்தை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தங்க ஆபரணங்கள் அணிவதை விட சேமித்து வைக்கும் பழக்கமே மிக அதிகமாக உள்ளது. வசதியானவர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்யும்போது சாதாரண மக்கள் வாங்கும் திறன் குறைகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்