சென்னை
ரூ.1½ லட்சம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்துவிட்டு கொள்ளை போனதாக நாடகம்
|பெட்ரோல் நிலைய மேலாளரை தாக்கி ரூ.1½ லட்சம் கொள்ளையடித்த வழக்கில் அவரே அந்த பணத்தை ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்துவிட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடியது தெரிந்தது. நண்பர்களுடன் அவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையர் கோவில் திருநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (வயது 23). இவர், சென்னை புதுப்பேட்டையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். ஆவடி வசந்தம் நகர் அருகே உள்ள இவர்களுக்கு சொந்தமான மற்றொரு பெட்ரோல் நிலையத்தின் உதவி மேலாளர் விடுமுறையில் சென்றதால் தற்போது அங்கு சென்று கார்த்திக்ராஜா பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் பெட்ரோல் நிலையத்தில் வசூலான ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 30 பணத்தை வங்கியில் செலுத்த சென்ற கார்த்திக்ராஜாவை மர்மநபர்கள் செங்கலால் தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக ஆவடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் புருஷோத்தமன் மேற்பார்வையில், குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாச்சல ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
கேமராவில் பதிவான காட்சிகள் போலீசாருக்கு கார்த்திக்ராஜா மீது சந்தேகத்தை எழுப்பியது. இதையடுத்து போலீசார் கார்த்திக்ராஜாவை அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர், அந்த பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து விட்டு, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாக தனது நண்பர்களுடன் சேர்ந்து நாடகமாடியது தெரியவந்தது.
கார்த்திக்ராஜா, ஏற்கனவே சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் வேலை செய்து வந்தார். அவருடன் திருவாரூர் மாவட்டம், நாகை மெயின் ரோடு, ஆண்டியார் கோவில் பகுதியை சேர்ந்த ஆனந்த் (22), தஞ்சாவூர் மாவட்டம் மனோஜ் பேட்டை, கன்னிமா நகரை சேர்ந்த தங்கமுத்து (26) ஆகியோரும் வேலை செய்து வந்தனர்.
அதன்பிறகு கடந்த 6 மாதமாக கார்த்திக் ராஜா, சென்னை புதுப்பேட்டையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் உதவி மேலாளராகவும், ஆனந்த் மற்றும் தங்கமுத்து ஆகிய இருவரும் தொலைக்காட்சி தொடர்களில் உதவியாளர்களாகவும் பணிபுரிந்து வந்தனர்.
இந்தநிலையில் ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சமூக வலைதளங்களில் வந்த விளம்பரத்தை பார்த்த கார்த்திக்ராஜா, பணம் சம்பாதிக்கும் ஆசையில் கடந்த 3-ந் தேதி ஆவடி பெட்ரோல் நிலையத்தில் வசூலான ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 30 பணத்தில் ரூ.75 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் ஷேர்மார்க்கெட்டில் செலுத்தினார்.
அதன்பிறகு மீதமுள்ள பணத்தை மட்டும் ஒரு பையில் எடுத்துக் கொண்டு வங்கியில் செலுத்துவதற்காக சென்றார். அப்போது தனது நண்பர்களான ஆனந்த், தங்கமுத்து ஆகியோரிடம் போனில் தொடர்பு கொண்ட கார்த்திக்ராஜா, "நான் வங்கிக்கு செல்லும்போது என்னை தாக்கி பணத்தை கொள்ளையடிப்பதுபோல் எடுத்துச்செல்லுங்கள். பின்னர் 3 பேரும் பங்கு வைத்து கொள்ளலாம்" என கூறினார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த அவர்களும் அங்கு வந்து கார்த்திக் ராஜாவை தாக்கி அவரிடம் இருந்த ரூ.80 ஆயிரத்தை பறித்து சென்றனர். ஆனால் கார்த்திக்ராஜா, ஷேர் மார்க்கெட்டில் ரூ.75 ஆயிரம் செலுத்தியதை மறைத்து, மர்ம நபர்கள் தன்னை தாக்கி ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக நாடகம் ஆடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஆனந்த், தங்கமுத்து ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைதான 3 பேரையும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.74 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.