< Back
மாநில செய்திகள்
கட்டிட தொழிலாளி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்:கொலை செய்துவிட்டு நாடகமாடிய விவசாயி கைதுபனமரத்துப்பட்டி அருகே பரபரப்பு
சேலம்
மாநில செய்திகள்

கட்டிட தொழிலாளி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்:கொலை செய்துவிட்டு நாடகமாடிய விவசாயி கைதுபனமரத்துப்பட்டி அருகே பரபரப்பு

தினத்தந்தி
|
22 Feb 2023 2:27 AM IST

பனமரத்துப்பட்டி அருகே கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

பனமரத்துப்பட்டி,

கட்டிட தொழிலாளி மர்ம சாவு


சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமம் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த மாதம் 5-ந் தேதி தனது வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அப்போது அவரது அருகே மது பாட்டிலும், பூச்சி மருந்து பாட்டிலும் கிடந்தன. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டதாக நினைத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த பனமரத்துப்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை

இந்த நிலையில் அய்யப்பனின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வந்தது. அதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதில் அய்யப்பன் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து கட்டிட தொழிலாளி மர்ம சாவு வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கட்டிட தொழிலாளியின் வீட்டின் அருகே வசிக்கும் விவசாயி விஜயகுமார் (38) என்பவர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதும், கொலையை மறைக்க மதுபாட்டில் மற்றும் பூச்சி மருந்து பாட்டிலை சம்பவ இடத்தில் விட்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

விசாரணையில் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

கட்டிட தொழிலாளி அய்யப்பனின் வீட்டின் அருகே வசித்து வருகிறேன். எனது மனைவியும், இறந்து போன அய்யப்பனும் நீண்ட நாட்களாக பேசி வந்தனர். இதையறிந்த நான் எனது மனைவியை அய்யப்பனிடம் பேசக்கூடாது என பலமுறை எச்சரித்தேன். மேலும் எனது மனைவியிடம் எதற்காக பேசுகிறாய் என அய்யப்பனிடமும் தகராறு செய்தேன். ஆனால் அவர் தொடர்ந்து எனது மனைவியிடம் பேசி வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று எனது தோட்டத்தின் அருகே வந்த அய்யப்பனை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டது போல் காண்பிக்க வேண்டும் என்பதற்காக, நான் ஏற்கனவே வாங்கி வந்திருந்த மதுவில் பூச்சி மருந்தை கலந்து அதனை அய்யப்பனின் வாயில் ஊற்றினேன். இதையடுத்து மதுபாட்டிலையும், பூச்சி மருந்து பாட்டிலையும், அய்யப்பனின் உடலின் அருகிலேயே போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன்.

அவர் கொலை செய்யப்பட்டது தெரியாதது போன்று நான் நாடகமாடிய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை கொண்டு போலீசார் என்னிடம் விசாரணை நடத்திய போது சிக்கி கொண்டேன். இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணை

அதே நேரத்தில் இந்த கொலை சம்பவத்தில் விஜயகுமார் தனியாக ஈடுபட்டாரா? அல்லது கொலை செய்ய வேறு சிலர் உதவி செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய விவசாயியை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Related Tags :
மேலும் செய்திகள்