கடலூர்
கடலூர் டாஸ்மாக் குடோனில் சுமைத்தூக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
|கடலூர் டாஸ்மாக் குடோனில் சுமைத்தூக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்முதுநகர்,
கடலூர் முதுநகர் அடுத்த சிப்காட் குடிகாடு பகுதியில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கிருந்து மாவட்டத்தில் உள்ள 146 டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபானங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பணிகள் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்த அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள், குடோனில் இருந்து லாரிகளில் மதுபானம் பெட்டிகளை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
வேலைநிறுத்தம்
இவ்வாறு ஏற்றி, இறக்கும் பணியின் போது பெட்டி ஒன்றுக்கு இத்தொழிலாளர்கள் 7 ரூபாய் வரைக்கும் வாங்கி வந்துள்ளனர். கடந்த சில தினங்களாக ஒப்பந்ததாரர் ரூ.3 பிடித்தம் செய்து கொண்டு மீதமுள்ள தொகையை வழங்கி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று காலை திடீரென பணியை புறக்கணித்து, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார், ஒப்பந்ததாரர் தரப்பினர் ஆகியோர் தொழிலாளர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
பணிகள் பாதிப்பு
அப்போது, தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் வெளியூர் சென்று இருப்பதால், அவர் வந்தபின் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பணிகளும் பாதிப்படைந்தது.