< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில்விசைப்படகுகள் திடீர் வேலைநிறுத்தம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில்விசைப்படகுகள் திடீர் வேலைநிறுத்தம்

தினத்தந்தி
|
26 Sept 2023 12:15 AM IST

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில்விசைப்படகுகள் திடீர் வேலைநிறுத்தம் நடந்தது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 2 தொழிலாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசைப்படகுகள்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகுகளில் தினமும் அதிகாலையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு, இரவில் கரைக்கு திரும்புவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த ஜான்சன், மில்லர்புரம் ஹவுசிங்போர்டு காலனியைச் சேர்ந்த மாரிசெல்வம் (வயது 36) ஆகிய 2 தொழிலாளர்களும் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளுக்கு ஐஸ் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

தொழிலாளர்கள் மீது தாக்குதல்

அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 மர்மநபர்கள் ஐஸ் வண்டி மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனை ஜான்சன், மாரிசெல்வம் ஆகியோர் கண்டித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த 3 மர்மநபர்களும் சேர்ந்து மதுபாட்டிலால் ஜான்சன், மாரிசெல்வம் ஆகியோரை தாக்கினர்.

இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசைப்படகுகள் வேலை நிறுத்தம்

இந்த நிலையில் மீன்பிடி துறைமுகத்தில் குடிபோதையில் வந்த மர்ம நபர்கள் தொழிலாளர்களை தாக்கியதைக் கண்டித்தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விசைப்படகு மீனவர்கள் நேற்று திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள், போலீசார் விசைப்படகு மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்