அரியலூர்
பலகார பொருட்கள், பட்டாசு விலை `கிடுகிடு' உயர்வு
|பலகார பொருட்கள், பட்டாசு விலை `கிடுகிடு'வென உயர்ந்துள்ளதால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தித்திக்குமா? என பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு, பலகாரங்கள், புதிய ஆடை தான். பண்டிகையையொட்டி அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புதிய ஆடை அணிந்து சாமி கும்பிட்டு பலகாரங்கள் சாப்பிட்டும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
இல்லத்தரசிகள் அதிர்ச்சி
இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் பலகாரங்கள் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆனால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். கடந்த 10 நாட்களில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, வெல்லம் விலை ரூ.10 வரை உயர்ந்துள்ளது. முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.
அரியலூரில் விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்களின் விலை நிலவரம் (கிலோவில்) வருமாறு:- துவரம் பருப்பு ரூ.120-க்கும், கடலை பருப்பு ரூ.70-க்கும், உளுந்தம் பருப்பு ரூ.120-க்கும், பாசிபருப்பு ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதன் முதல் தரம் கிலோவுக்கு ரூ.20 கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முந்திரி, திராட்சை
வெல்லம் ரூ.50-க்கும், மிளகு ரூ.630-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.290-க்கு விற்பனையான சீரகம் இந்த வாரம் ரூ.310-க்கு விற்பனை ஆகிறது. சோம்பு ரூ.220-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.1,000-க்கு விற்ற ஏலக்காய் இந்த வாரம் 1,100-க்கு விற்பனையாகிறது. முந்திரி பருப்பு ரூ.630-க்கும், உலர் திராட்சை-ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் தலா ரூ.85-க்கு விற்பனையான கடுகு, வெந்தயம் இந்த வாரம் ரூ.92-க்கு விற்பனையாகிறது. தனியா- ரூ.150, மிளகாய் (நீட், குண்டு) தலா ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.80-க்கு விற்ற பூண்டு இந்த வாரம் ரூ.90-க்கு விற்பனையாகிறது. புளி முதல் தரம் ரூ.140-க்கும், 2-ம் தரம் ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு தித்திக்குமா? என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
3 நாள் வியாபாரம்
அரியலூர் மாவட்டம் தா.பழூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் மோகன்:- தீபாவளி பண்டிகையையொட்டி கடைசி 3 நாட்கள் வியாபாரம் கூடுதலாக இருக்கும். இந்த ஆண்டும் அதுபோலத்தான் இருக்கும் என நம்புகிறோம். ஆனாலும் முந்தைய வாரங்களில் வழக்கமாக இருக்கக்கூடிய எண்ணெய், பருப்பு வகைகள் போன்றவற்றின் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று குறைவாகவே உள்ளது.
கொரோனா
குடும்பத்தலைவி சுதா:- தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளில் பலகாரம் செய்வார்கள். இதனால் எண்ணெய், பருப்பு வகைகள் விலை உயர்ந்துள்ளது. கொரோனா காலத்தில் ஏறிய விலைவாசி தாங்க முடியாத அளவு இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளன. இதனால் ஏழை மற்றும் நடுத்த மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இருப்பினும் குழந்தைகளுக்காக தின்பண்டம், பட்டாசு, புத்தாடை உள்ளிட்டவை வாங்க வேண்டியுள்ளது.
எண்ணெய், மாவு வகைகள் விலை அதிகரிப்பு
தீபாவளி பண்டிகைக்கு முக்கிய பொருளான எண்ணெய் விலை அதிகளவு உயர்ந்துள்ளது. இதில் கடந்த வாரம் 1 லிட்டர் ரூ.145-க்கு விற்ற சூரியகாந்தி எண்ணெய் நேற்று ரூ.160-க்கு விற்பனையானது. ரூ.96-க்கு விற்ற பாமாயில் ரூ.100-க்கும் விற்பனையாகிறது. நல்லெண்ணெய் ரூ.290-க்கும், கடந்த வாரம் ரூ.185-க்கு விற்ற கடலை எண்ணெய் ரூ.190-க்கும், ரூ.640-க்கு விற்ற நெய் நேற்று ரூ.680-க்கும் விற்கப்படுகிறது. தேங்காய் எண்ணை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரகம் வாரியாக ரூ.182 முதல் ரூ.240 வரை விற்கப்படுகிறது.
அதேபோல் மைதா மாவு ரூ.48-க்கும், கோதுமை மாவு ரூ.60-க்கும், கடலை மாவு ரூ.90-க்கும் விற்பனையாகிறது. இதில் போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களால் 2-ம் மற்றும் 3-ம் கட்ட வியாபாரிகளிடம் 5 முதல் 10 சதவீதம் வரை கூடுதல் விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மளிகை பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்பு அதிகம் என்றும் வியாபாரிகள் தரப்பில் கூறுகின்றனர். மளிகை பொருட்களை போல் இனிப்பு, கார வகைகளின் விலையும், பட்டாசுகளின் விலையும் உயர்ந்துள்ளது.
இனிப்பு-கார வகைகளும் விலை உயர்வு
மளிகை பொருட்கள், எண்ணெய் வகைகள், மாவு வகைகளின் விலை உயர்ந்துள்ளதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இனிப்பு-கார வகைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இனிப்பு-காரம் தயாரிக்கும் தொழிலாளர்களின் சம்பளம் உயர்ந்தாலும் ஆட்கள் கிடைக்கவில்லை. மேலும் பெரும்பாலான நிறுவனங்களில் தங்களது ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு போனஸ் தொகையுடன், இனிப்பு பாக்ஸ்களையும் கொடுத்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் கடைக்கு இனிப்பு வாங்க வருவதில்லை. ஆனாலும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக தற்போது தீபாவளி தள்ளுபடியுடன் விற்பனை செய்து வருகிறோம். ஒரு கிலோ சாதா இனிப்பு வகைகள் ரூ.280-க்கும், சிறப்பு இனிப்பு வகைகள் ரூ.360-க்கும், கார வகைகள் கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய கடைகளின் இதைவிட விலை சற்று அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.