< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பலகார பொருட்கள், பட்டாசு விலை `கிடுகிடு' உயர்வு

தினத்தந்தி
|
20 Oct 2022 12:41 AM IST

பலகார பொருட்கள், பட்டாசு விலை `கிடுகிடு' வென உயர்ந்தது. இதனால் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு தித்திக்குமா? என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு, பலகாரங்கள், புதிய ஆடை தான். பண்டிகையையொட்டி அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புதிய ஆடை அணிந்து சாமி கும்பிட்டு பலகாரங்கள் சாப்பிட்டும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் பலகாரங்கள் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆனால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். கடந்த 10 நாட்களில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, வெல்லம் விலை ரூ.10 வரை உயர்ந்துள்ளது. முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.

பெரம்பலூரில் விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்களின் விலை நிலவரம் (கிலோவில்) வருமாறு:- துவரம் பருப்பு ரூ.120-க்கும், கடலை பருப்பு ரூ.70-க்கும், உளுந்தம் பருப்பு ரூ.120-க்கும், பாசிபருப்பு ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதன் முதல் தரம் கிலோவுக்கு ரூ.20 கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முந்திரி, திராட்சை

வெல்லம் ரூ.50-க்கும், மிளகு ரூ.630-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.290-க்கு விற்பனையான சீரகம் இந்த வாரம் ரூ.310-க்கு விற்பனை ஆகிறது. சோம்பு ரூ.220-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.1,000-க்கு விற்ற ஏலக்காய் இந்த வாரம் 1,100-க்கு விற்பனையாகிறது. முந்திரி பருப்பு ரூ.630-க்கும், உலர் திராட்சை-ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் தலா ரூ.85-க்கு விற்பனையான கடுகு, வெந்தயம் இந்த வாரம் ரூ.92-க்கு விற்பனையாகிறது. தனியா- ரூ.150, மிளகாய் (நீட், குண்டு) தலா ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.80-க்கு விற்ற பூண்டு இந்த வாரம் ரூ.90-க்கு விற்பனையாகிறது. புளி முதல் தரம் ரூ.140-க்கும், 2-ம் தரம் ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு தித்திக்குமா? என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

ஆன்லைன் வியாபாரம்

பெரம்பலூர் பள்ளிவாசல் மளிகை வியாபாரி சுந்தரம் சிவராமலிங்கம்:- தற்போது மழை காலம் என்பதால் உற்பத்தி பாதிப்பு காரணமாக பெரம்பலூருக்கு பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் மளிகை பொருட்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. தற்போது சில நிறுவனங்கள் மளிகை பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருவதால் வீட்டை விட்டு கடைவீதிக்கு வரக்கூடாது என்று நினைக்கும் மக்கள் ஆன்லைன் மூலம் மளிகை பொருட்கள் வாங்குவதால் எங்களை போல் வியாபாரிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது.

சமையல் கியாஸ் உயர்வு

கல்பாடி அகரம் பகுதியை சேர்ந்த மருதாம்பாள்:- நான் தற்போது பெரம்பலூருக்கு மளிகை பொருட்களை வாங்க வந்துள்ளேன். இங்கு மளிகை பொருட்களின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. இதனால் குறைந்த அளவிலான மளிகை பொருட்களை வாங்க முடிந்தது. சிறு வியாபாரிகளிடம் வாங்கினால் இதை விட அதிகமாக விலை இருக்கும். ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதால் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது.

நேரக்கட்டுப்பாடு

பட்டாசு வாங்க வந்த பெரம்பலூரை சேர்ந்த நல்லுசாமி:- இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை உயர்ந்துள்ளதால், குறைந்த அளவே பட்டாசுகளை வாங்க முடிகிறது. அரசின் நேர கட்டுப்பாடு இருப்பதாலும் பொதுமக்கள் பட்டாசுகளை குறைந்த அளவே வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பட்டாசு விற்பனை குறைந்துள்ளது-வியாபாரி கருத்து

பெரம்பலூர் பட்டாசு கடை உரிமையாளர் ராஜேஷ் கூறுகையில், இந்த ஆண்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிக்க வெறும் 2 மணி நேரம் மட்டுமே நேரம் ஒதுக்கியுள்ளது. இதனால் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. சிறுவர்களின் பட்டாசுகள் மட்டும் ஓரளவுக்கு விற்பனை ஆகி வருகிறது. சிலர் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும் சிவகாசிக்கு சென்று பட்டாசு வாங்கி வைத்துள்ளனர். இதனால் எங்களை போல் தற்காலிக பட்டாசு கடைகளில் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இளைஞர்கள் பெரும்பாலானோர் பட்டாசு வெடிப்பதில்லை. அவர்கள் சினிமா பார்க்க தியேட்டருக்கும், சுற்றுலா தளங்களுக்கும் சென்று விடுகின்றனர். பெரியவர்களும் வீடுகளில் டி.வி.க்களில் ஒளிப்பரப்படும் நிகழ்ச்சிகளை பார்ப்பதில் மூழ்கி விடுகின்றனர். அவர்களும் பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் கடைகளில் பட்டாசு விற்பனை குறைந்துள்ளது, என்றார்.

வீடுகளில் பலகாரம் செய்வது குறைந்துள்ளது

இனிப்பு-கார வகைகள் வாங்க வந்த செங்குணத்தை சேர்ந்த அமுதா கூறுகையில், முன்பெல்லாம் தீபாவளி பண்டிகைக்கு அனைத்து வீடுகளிலும் தங்களால் இயன்ற பலகார வகைகளை தயாரித்து திண்பார்கள். அதில் வேலைப்பாடு அதிகம் என்பதால் தற்போது வீடுகளில் பலகாரம் செய்வது குறைந்துள்ளது. இதனால் கடைகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான அளவுக்கு இனிப்பு-கார வகைகளை வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இனிப்பு-கார வகைகளின் விலை சற்று அதிகம் தான். இனிப்பு-காரம் இல்லாமல் தீபாவளி பண்டிகையை எப்படி கொண்டாட முடியும் என்றார்.

எண்ணெய், மாவு வகைகள் விலை அதிகரிப்பு

தீபாவளி பண்டிகைக்கு முக்கிய பொருளான எண்ணெய் விலை அதிகளவு உயர்ந்துள்ளது. இதில் கடந்த வாரம் 1 லிட்டர் ரூ.145-க்கு விற்ற சூரியகாந்தி எண்ணெய் நேற்று ரூ.160-க்கு விற்பனையானது. ரூ.96-க்கு விற்ற பாமாயில் ரூ.100-க்கும் விற்பனையாகிறது. நல்லெண்ணெய் ரூ.290-க்கும், கடந்த வாரம் ரூ.185-க்கு விற்ற கடலை எண்ணெய் ரூ.190-க்கும், ரூ.640-க்கு விற்ற நெய் நேற்று ரூ.680-க்கும் விற்கப்படுகிறது. தேங்காய் எண்ணை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரகம் வாரியாக ரூ.182 முதல் ரூ.240 வரை விற்கப்படுகிறது.

அதேபோல் மைதா மாவு ரூ.48-க்கும், கோதுமை மாவு ரூ.60-க்கும், கடலை மாவு ரூ.90-க்கும் விற்பனையாகிறது. இதில் போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களால் 2-ம் மற்றும் 3-ம் கட்ட வியாபாரிகளிடம் 5 முதல் 10 சதவீதம் வரை கூடுதல் விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மளிகை பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்பு அதிகம் என்றும் வியாபாரிகள் தரப்பில் கூறுகின்றனர். மளிகை பொருட்களை போல் இனிப்பு, கார வகைகளின் விலையும், பட்டாசுகளின் விலையும் உயர்ந்துள்ளது.

இனிப்பு-கார வகைகளும் விலை உயர்வு

பெரம்பலூர் கல்யாண் நகர் இனிப்பு கடையின் உரிமையாளர் அரணாரை செந்தூர் பாண்டியன் கூறுகையில், மளிகை பொருட்கள், எண்ணெய் வகைகள், மாவு வகைகளின் விலை உயர்ந்துள்ளதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இனிப்பு-கார வகைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இனிப்பு-காரம் தயாரிக்கும் தொழிலாளர்களின் சம்பளம் உயர்ந்தாலும் ஆட்கள் கிடைக்கவில்லை. மேலும் பெரும்பாலான நிறுவனங்களில் தங்களது ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு போனஸ் தொகையுடன், இனிப்பு பாக்ஸ்களையும் கொடுத்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் கடைக்கு இனிப்பு வாங்க வருவதில்லை. ஆனாலும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக தற்போது தீபாவளி தள்ளுபடியுடன் விற்பனை செய்து வருகிறோம். ஒரு கிலோ சாதா இனிப்பு வகைகள் ரூ.280-க்கும், சிறப்பு இனிப்பு வகைகள் ரூ.360-க்கும், கார வகைகள் கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய கடைகளின் இதைவிட விலை சற்று அதிகமாக இருக்கும், என்றார்.

மேலும் செய்திகள்