கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் திடீர் மழை
|கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் திடீரென மழை பெய்தது. மேலும் பலத்த காற்று வீசியதால் உளுந்தூர்பேட்டையில் உயர் மின்அழுத்த கோபுரம் உடைந்து விழுந்தது.
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், இரவில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் கடும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையில் மாலை 3 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தது.
அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங் கியது. இந்த மழை சுமார் 1½ மணி நேரம் பெய்தது. திடீரென மழை பெய்ததால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் மழையில் நனைந்தபடி தங்களது வீட்டுக்கு சென்றனர். மேலும் சாலையில் வழிந்து ஓடிய மழைநீர் சாலையோர பள்ளத்தில் குளம்போல் தேங்கி நின்றது. மேலும் பலத்த காற்று வீசியதில் உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை அருகே இருந்த உயர் மின்அழுத்த மின்கோபுரம் உடைந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு மீண்டும் மின்வினியோகம் செய்யப்பட்டது.
விழுப்புரம்
திருக்கோவிலூரில் மாலை 5.10 மணி முதல் 5.30 வரை பலத்த மழை பெய்தது. இதனால் பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். இது தவிர சங்கராபுரம், திருநாவலூர் உள்பட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர், அரசூர், செஞ்சி, அனந்தபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.