< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்
மாநில செய்திகள்

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

தினத்தந்தி
|
18 Oct 2022 6:04 PM IST

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் உள்ளூர் மட்டுமின்றி போளூர், கலசப்பாக்கம், தண்டராம்பட்டு போன்ற பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் தினமும் அரசு பஸ்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். பின்னர் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு அரசு டவுன் பஸ்களில் செல்கின்றனர்.

பஸ் நிலையத்தில் மாணவ, மாணவிகள் செல்லும் வகையில் போதிய பஸ் வசதிகள் இல்லாததால் சரியான நேரத்தில் அவர்கள் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. குறிப்பிட்ட பஸ்களில் செல்லும் போது மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கிய படி செல்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு செல்ல போதிய வசதி இல்லாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பஸ் நிலையத்திற்குள் மற்ற பஸ்கள் வர முடியாத அளவிற்கு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் பஸ் நிலையத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் நடத்தினர். அப்போது அவர்கள் கல்லூரிக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதற்கு தேவையான போக்குவரத்து வசதி செய்து தர போக்குவரத்து துறை அதிகாரியிடம் பேசுவதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்