< Back
மாநில செய்திகள்
குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் திடீர் பள்ளம்
விருதுநகர்
மாநில செய்திகள்

குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் திடீர் பள்ளம்

தினத்தந்தி
|
9 Aug 2023 3:28 AM IST

ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

குடிநீர் தட்டுப்பாடு

ராஜபாளையம் நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் அமைத்து பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

மேலும் அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது கடுமையான வெயில் அடிப்பதால் ஆற்றுப்பகுதியில் போதிய மழை பெய்யாததால் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சரிப்படுத்த தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக நகராட்சி நிர்வாகம் தாமிரபரணி தண்ணீரை தற்போது உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி அதன் மூலம் பொது மக்களுக்கு வழங்க முயற்சி செய்கின்றனர்.

சாலையில் பள்ளம்

பல இடங்களில் பொதுமக்கள் தாமிரபரணி தண்ணீரை பிடித்தது போக சாலையில் விட்டு விடுகின்றனர். இதனால் சாலையில் தண்ணீர் வீணாக செல்கின்றன. நேற்று முன்தினம் தாமிரபரணி தண்ணீரை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தண்ணீரை திறந்து விட்டனர். அப்போது பல்வேறு இடங்களில் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் சென்றது.

தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் பல்வேறு இடங்களில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதில் 7-வது வார்டு, 18,19-வது வார்டு பகுதிகளில் அதிகமான தண்ணீர் வீணாக தெருக்களில் சென்றன.

அதிகாரிகள் நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

தற்போது 10 தினங்களுக்கு ஒரு முறை நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வருகிறார்கள். மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் போதிய மழை பெய்யாததால் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

தற்போது தாமிரபரணி குடிநீர் குழாய்கள் முறையாக பதிக்கப்படவில்லை. இதை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் தண்ணீரை வழங்கினால் குழாயில் உடைப்பு ஏற்படாமல் இருக்கும். ஏற்கனவே திட்ட பணிகளால் அனைத்து தெருக்களிலும் சாலைகள் மிகவும் சேதமடைந்தன. இதை தற்போது தான் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு தெருக்களிலும் சாலை வசதியை செய்து வருகின்றனர். இந்த சாலை போதுமான அளவிற்கு பலம் இல்லாததால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வைத்து சீர்படுத்தி பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை வழங்குவதுடன், சாலையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்