சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
|சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட விமானத்தில் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் 5 மணி நேரம் தவித்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு நேற்று காலை 11.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் செல்ல இருந்தது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உட்பட 142 பயணிகள் விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தனர்.
விமானம் ஓடுபாதை நோக்கி செல்லும் போது எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு உள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து விமானத்தை அவசரமாக நிறுத்தி விட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக விமானம் இழுவை வண்டி மூலமாக நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
பயணிகள் தவிப்பு
விமானம் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டது. விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் விமானம் உடனடியாக பழுது பார்க்க முடியவில்லை.
இதையடுத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்பட 38 பயணிகள் விமானத்தில் பயணிக்க விரும்பவில்லை என்று கூறி தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு இறங்கினார். மதுரைக்கு சென்ற வேறு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.
மேலும் 104 பயணிகள் தவித்துக் கொண்டு இருந்தனர். சுமார் 5 மணி நேரத்திற்கு பின் மாலை 4:30 மணிக்கு 104 பயணிகளுடன் விமானம் மதுரைக்கு புறப்பட்டு சென்றது.