நீலகிரி
தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மண் சரிவு
|ஊட்டி-கூடலூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்க அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
ஊட்டி-கூடலூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்க அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தற்போது கூடலூர்-ஊட்டி இடையே பழுதடைந்த பாலங்களை இடித்து விட்டு புதிதாக பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழுதடைந்த பாலம் இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது.
இதற்கு பதிலாக புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியபோது, பழைய பாலத்தின் கரை உடைந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து துண்டித்தது. இதைத்தொடர்ந்து மேற்புறம் பகுதியில் சாலை அமைத்து போக்குவரத்து நடைபெற்று வந்தது. மேலும் புதிய பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விபத்து அபாயம்
இந்த நிலையில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தின் அருகே சாலையோரத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. உடனே சம்பந்தப்பட்ட துறையினர் அப்பகுதியில் தடுப்புகள் வைத்தனர். ஆனாலும், அந்த சாலையில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் சமயத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் குறிப்பிட்ட இடத்தில் வாகனங்களை அதிவேகமாக இயக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையே மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.