காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் திடீர் கனமழை
|காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்ற உற்சவம் நடைபெறும் முன்னாளில் மழை பெய்யும் என்பது ஐதீகம் ஆகும்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கோடை கத்ரி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நாள் தோறும் 100 டிகிரிக்கு மேல் கோடை வெப்பம் பதிவாகி பொதுமக்களும்,வாகன ஓட்டிகளும் சாலையில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் சென்னை வானிலை மையம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், இன்று காலை முதலே காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பிற்பகல் நேரத்தில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து பல்வேறு பகுதிகளில் திடிரென கனமழை பெய்தது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, சின்ன காஞ்சிபுரம், நத்தப்பேட்டை, பெரியார் நகர், ஓலிமுகமது பேட்டை, கீழம்பி,தாமல், கோவிந்தவாடி, அகரம், ஈஞ்சம்பாக்கம், பரந்தூர், ஏனாத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து பூமி குளிர்ந்தது.
கோடை கத்திரி வெயில் வெப்பம் சற்று தணிந்து சில்லென குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்ற உற்சவம் நடைபெறும் முன்னாளில் மழை பெய்யும் என்பது ஐதீகம், அந்த ஐதீகத்தை மெய்ப்பிக்கும் படி காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.