< Back
மாநில செய்திகள்
கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

தினத்தந்தி
|
2 Oct 2023 1:30 AM IST

திடீர் வெள்ளப்பெருக்கினால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி கோவை குற்றாலம் அருவி உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, வனத்தை சுற்றி பார்ப்பது வழக்கம். குறிப்பாக கோடை விடுமுறையான ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும்.


தற்போது காலாண்டு விடுமுறை, மிலாது நபி உள்ளிட்ட தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.


இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய பகுதிகளான சாடிவயல், நரசீபுரம், ஆலாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மிதமானது முதல் கனமழையும் பெய்து வருகிறது.


தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நேற்று காலை முதல் கோவை குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து போளுவாம்பட்டி வனத்துறையினர் கூறியதாவது:- கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடப்படுகிறது. சுற்றுலா பயணிகளும் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும் செய்திகள்