< Back
மாநில செய்திகள்
ஓடும் காரில் திடீர் தீ -  5 பேர் உயிர் தப்பினர்
சேலம்
மாநில செய்திகள்

ஓடும் காரில் திடீர் தீ - 5 பேர் உயிர் தப்பினர்

தினத்தந்தி
|
20 Jun 2023 1:00 AM IST

ஓடும் காரில் திடீர் தீபிடிப்பு 5 பேர் உயிர் தப்பினர்

சேலம் அருகே ஓடும் காரில் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் உருக்குலைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

காரில் தீ

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தாணிப்பாடியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 56). இவர் நேற்று முன்தினம் இரவு சேலம் வழியாக கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டு வந்தார்.

அந்த காரில் ஜான்சன் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பயணம் செய்தனர். அவர்கள் சென்ற கார், சேலம் உடையாப்பட்டி அருகே பெருமாள்கோவில் மேடு என்ற இடத்தில் நேற்று இரவு வந்தது.

அப்போது காரில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜான்சன், காரை ஓரமாக நிறுத்திவிட்டு, காருக்குள் இருந்த 5 பேரும் அவசரமாக கீழே இறங்கினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த கார் திடீரென மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

5 பேர் உயிர் தப்பினர்

இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், அம்மாப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் கரும்புகை வந்தவுடன் ஜான்சன் குடும்பத்தினர் உடனடியாக கீழே இறங்கியதால் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்