திருவள்ளூர்
பேரம்பாக்கம் அருகே சாலையில் சென்ற கல்லூரி பஸ்சில் திடீர் தீ விபத்து - 13 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
|பேரம்பாக்கம் அருகே சாலையில் சென்ற கல்லூரி பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பஸ்சில் பயணம் செய்த 13 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இருந்து நேற்று மாலை கல்லூரி பஸ் ஒன்று 40 மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டு மப்பேடு வழியாக தக்கோலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வழியில் 27 மாணவர்களை இறக்கிவிட்ட நிலையில் 5 மாணவிகள், 8 மாணவர்கள் என 13 பேர் பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர்.
அந்த கல்லூரி பஸ் மப்பேடு அருகே உள்ள வெள்ளகால்வாய் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. இதை கண்ட டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தி என்ஜினில் ஏற்பட்ட கோளாரை சரிசெய்ய முயன்றபோது புகை அதிகமாக வந்தது. உடனே சுதாரித்து கொண்ட டிரைவர் பஸ்சில் இருந்த 13 மாணவர்களையும் உடனே இறங்குமாறு கூறினார்.
பஸ்சில் இருந்த மாணவர்கள் அலறி அடித்தபடி பஸ்சை விட்டு வெளியேறினார்கள். அதற்குள் பஸ்சில் இருந்து கரும் புகை அதிகளவில் வெளியேறியபடி பஸ்சில் மள மளவென தீ பிடித்தது. சரியான நேரத்தில் பஸ்சில் இருந்து அனைவரும் இறங்கியதால் 14 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். தீ அதிக அளவு பரவி பஸ் முழுவதும் தீ படித்து எரிவதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையின் இரண்டு புறங்களிலும் ஓரமாக நிறுத்தினார்கள்.
இது குறித்து உடனடியாக பேரம்பாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீப்பற்றி எரிந்த பஸ்சின் மீது தண்ணீரை பீச்சி அடித்து கட்டுப்படுத்த முயன்றனர். அதற்குள் அந்த பஸ் முழுவதுமாக எரிந்து எலும்பு கூடாக மாறியது. பஸ் தீப்பற்றி எரிந்ததால் பூந்தமல்லி அரக்கோணம் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.