செங்கல்பட்டு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: எக்ஸ்ரே எந்திரம் தீயில் கருகியது
|செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த எக்ஸ்ரே எந்திரம் தீயில் கருகியது.
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நாள் தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருவது வழக்கமாக உள்ளது. செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அவ்வப்போது முறையான பராமரிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள எக்ஸ்ரே வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் உடனடியாக அங்கு இருந்த தீயணைப்பான் மூலம் தீ அணைக்கப்பட்டது.
உடனடியாக அருகில் இருந்த செங்கல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை விரைந்து அணைத்தனர்.
தீ விபத்து காரணமாக எக்ஸ்-ரே வார்டில் கரும்புகை சூழ்ந்தது. எக்ஸ்ரே எந்திரம் தீயில் கருகியது. எக்ஸ்ரே வார்டில் இருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அலறி அடித்தபடி வெளியேறினர். முதல்கட்ட விசாரணையில், இன்வெர்ட்டர் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.