சென்னை
டெல்லி செல்ல இருந்த சென்னை விமானத்தில் திடீர் எந்திர கோளாறு - 164 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
|சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்ல இருந்த விமானத்தில் ஏற்பட்ட திடீர் எந்திர கோளாறால் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 164 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்ல ஏர் இந்தியா விமானம் நேற்று காலை 6 மணிக்கு புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக அதிகாலை 5 மணிக்கு வந்து சோதனைகள் முடித்து விட்டு 164 பயணிகள் விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். இந்த நிலையில், விமானத்தில் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. பயணிகள் யாரும் விமானத்தில் ஏற்றப்படவில்லை. பயணிகள் 4 மணி நேரத்துக்கும் மேலாக விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, விமானநிலைய பொறியாளர்கள் எந்திரங்களை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விமானத்தில் ஏற்பட்டுள்ள எந்திர கோளாறை சரி செய்ய முடியாததால் காலை 10 மணிக்கு விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் டெல்லி செல்லும் வேறு விமானத்தில் சில பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். சில பயணிகள் பயணத்தை நாளை ஒத்தி வைக்குமாறு கூறி விட்டு சென்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட தயாராக இருந்த விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் எந்திர கோளாறை விமானிகள் முன்னெச்சரிக்கையாக கண்டறிந்ததால் 164 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.