விழுப்புரம்
47 துப்புரவு தொழிலாளர்கள் திடீர் பணிநீக்கம்
|விழுப்புரம் நகராட்சியில் 47 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் தூய்மைப்பணிகளில் தினந்தோறும் துப்புரவு தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றி வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 47 பேர், எந்தவித முன்அறிவிப்பும் இன்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தர்ணா போராட்டம்
இந்நிலையில் ஆத்திரமடைந்த ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் நேற்று காலை நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திடீரென அவர்கள் அனைவரும் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களை பணியில் இருந்து நீக்கம் செய்த நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தங்களுக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்கக்கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் இருவேல்பட்டு குமார், செயலாளர் செல்லா, இளைஞரணி அமைப்பாளர் ஜெயஸ்டாலின், தொழிற்சங்க செயலாளர் அழகிரி, மாவட்ட துணை செயலாளர் சம்பத் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தின்போது சில துப்புரவு தொழிலாளர்கள், அழுது ஒப்பாரி வைத்தவாறு போராட்டம் செய்தனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.