< Back
மாநில செய்திகள்
தண்டையார்பேட்டையில் மனநல காப்பகத்தில் வாலிபர் திடீர் சாவு; அடித்துக்கொலையா? போலீஸ் விசாரணை
சென்னை
மாநில செய்திகள்

தண்டையார்பேட்டையில் மனநல காப்பகத்தில் வாலிபர் திடீர் சாவு; அடித்துக்கொலையா? போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
21 Aug 2023 4:40 PM IST

தண்டையார்பேட்டையில் மனநல காப்பகத்தில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள காலரா ஆஸ்பத்திரியில் ஆண்கள் மனநல காப்பகம் உள்ளது. இங்கு மகேஷ் (வயது 35) என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று கழிவறைக்கு சென்ற மகேஷ், திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இது பற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் சென்டிரல் ெரயில் நிலையத்தில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட மகேசை ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

அங்கிருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தண்டையார்பேட்டை மனநலம் காப்பகத்தில் அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக மகேஷ் இரவு நேரங்களில் யாரையும் தூங்கவிடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் காப்பகத்தில் அவருடன் தங்கி இருந்த 6 பேர் கோபத்தில் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் மகேசுக்கு மார்பு, வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. எனவே மகேஷ், அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்