குளிர்பானம் குடித்த 5 வயது சிறுமி திடீர் சாவு: திருவண்ணாமலையில் சோகம்
|குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசியை அடுத்த கனிகிலுப்பைக் கிராமம் ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார், கூலி தொழிலாளி. இவரது 2-வது மகள் காவ்யாஸ்ரீ (வயது 5). இவள் அருகே உள்ள தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தாள்.
காவ்யாஸ்ரீ நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் 10 ரூபாய் குளிர்பானம் வாங்கி வந்து குடித்ததாக கூறப்படுகிறது. குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. அதனைத்தொடர்ந்து மூக்கிலும், வாயிலும் நுரை தள்ளிய நிலையில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தாள்.
உடனடியாக பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காவ்யாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.