கொசஸ்தலை ஆற்றில் திடீரென செத்து மிதந்த மீன்கள்: தொழிற்சாலை கழிவுநீர் காரணமா?
|கொசஸ்தலை ஆற்றில் திடீரென அதிக அளவு மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது.
திருவொற்றியூர்,
கொசஸ்தலை ஆறு வெள்ளி வாயல் சாவடி, எடப்பாளையம், மணலிபுதுநகர், கடையங்குப்பம் வழியாக பாய்ந்து அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர் முகதுவார பகுதியில் கடலில் கலக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர் முகத்து வாரம் பகுதியில் அதிகளவு மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. அருகில் உள்ள அனல் மின் நிலையத்தில் இருந்து குளிரூட்டும் நீரை ஆற்றில் விடுவதாலும், தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீராலும் மீன்கள் இறப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து காட்டுக் குப்பம் எண்ணூரைச் சேர்ந்த மீனவர்கள் கூறும் போது, "கடந்த சில நாட்களாக கொசதஸ்தலை ஆற்று பகுதியில் மீன்கள் இறப்பது அதிகரித்து உள்ளது. இது எங்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்து உள்ளது. இது பல வருடங்களாக விட்டு, விட்டு நடைபெறுகிறது. அதிகளவு மீன்கள் இறப்பது இதுவே முதல் முறை" என்றனர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறும் போது, "ஏற்கனவே ரசாயன வாயு கசிவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தொழிற்சாலை, அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றும் கழிவுநீரை கண்காணிக்க வேண்டும். அடையாறு, கூவம் ஆறுகளுக்கு கொடுக்கும் முக்கியத் துவத்தை கொசஸ்தலை ஆற்றுக்கு அதிகாரிகள் கொடுப்பதில்லை" என்றார்
.