கள்ளக்குறிச்சி
இரு தரப்பினரிடையே திடீர் மோதல் வீடுகள் சூறை
|மூங்கில்துறைப்பட்டில் இரு தரப்பினரிடையே நடந்த திடீர் மோதலில் வீடுகள் சூறையாடப்பட்டு, வாகனகளும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் பதற்றம் நிலவி வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
மூங்கில்துறைப்பட்டு
இளைஞர்கள் மோதல்
மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் பொரசப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே நேற்று மதியம் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
இதில் ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அப்போது போலீசார் இருதரப்பினரும் தேவையில்லாமல் பிரச்சினையில் ஈடுபட வேண்டாம் என்றும், தகராறில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி போலீஸ் நிலையத்தில் திரண்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தினர்.
வீடுகள் சூறை
இதையடுத்து இரவு 7 மணி அளவில் மீண்டும் இருதரப்பு இளைஞர்களும் ஒருவர் ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பொரசப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர்நகருக்கு வந்து அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடியதோடு, வெளியில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மூங்கில்துறைப்பட்டு போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை மறியல்
மேலும் இதில் ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடா்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
இது தரப்பினரிடையே நடந்த மோதல் சம்பவத்தால் பொரசப்பட்டு, மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. அங்கு அசம்பாவித சம்பவங்களை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு தரப்பு இளைஞர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.