ஏற்காடு கோடை விழா தேதி திடீர் மாற்றம்
|ஏற்காடு கோடை விழா தொடங்கும் தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வருகிற 25-ந் தேதி கோடை விழா-மலர் கண்காட்சி தொடங்குகிறது.
Sudden change in Yercaud Summer Festival dateஏற்காடு,
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் இந்த ஆண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 26-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வருகிற 24-ந் தேதி ஆத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தி.மு.க. பொதுக்கூட்டம் மற்றும் 26-ந் தேதி சென்னைக்கு பிரதமர் மோடி வருகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு நாளைக்கு முன்னதாக அதாவது வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு 45-வது ஏற்காடு கோடை விழா- மலர்கண்காட்சி தொடக்க விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் பங்கேற்பு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் விழாவை தொடங்கி வைக்கிறார்கள். இதில் பல்வேறு துறை அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.
தமிழக அரசின் பல்வேறு துறை திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கண்காட்சி அரங்குகள் இடம் பெறுகிறது. கோடைவிழா நாட்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலா பயணிகள், செல்ல பிராணிகள் கலந்து கொள்ளும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
குறிப்பாக ஏற்காடு அண்ணா பூங்காவில் 5 லட்சம் அரிய மலர்களை கொண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி மற்றும் மாம்பழம் கண்காட்சிகளும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஏரி பூங்காவும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு கோடையிலும் ஏற்காட்டில் நல்ல சீதோஷ்ணநிலை காணப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து கோடை விழாவை சிறப்பிக்க ேவண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
ஏற்காட்டில் இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளும், அண்ணாமலையார் கோவில், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா, பக்கோடா பாயின்ட், படகு இல்லம், பட்டுவளர்ச்சி கண்காட்சி மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன. ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடைவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விழாவின் ஒரு பகுதியாக புகைப்பட கலைஞர்களுக்கான போட்டி (ஏற்காட்டிலுள்ள சுற்றுலாத்தலங்களின் புகைப்படங்கள் ஏ4 அளவு) நடத்தி சிறந்த புகைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று புகைப்பட கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் மூன்று புகைப்படங்கள் சுற்றுலா அரங்கில் பார்வைக்கு வைக்கப்படும்.
இப்போட்டியில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் தங்களின் புகைப்பட படைப்புகளை வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக அறை எண். 217-ல் உள்ள சுற்றுலா அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும்.