தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்: செல்லூர் ராஜு
|தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று செல்லூர் ராஜு கூறினார்.
மதுரை,
மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:-
சாமானியனும் நாட்டை ஆள முடியும் என்பதை நிகழ்த்தி காட்டியவர் அறிஞர் அண்ணா. திமுக மீது அந்த அளவுக்கு மக்கள் கோபத்தில் உள்ளனர். எம்.ஜி.ஆர். காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் ஏழை மக்களை சார்ந்ததாக இருக்கும். அதிமுக ஆட்சியில்தான் பள்ளிக்குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் சீருடைகள், லேப்-டாப், தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. திமுக ஆட்சியில் அப்படி ஏதாவது ஒரு திட்டத்தை சொல்ல முடியுமா?
கருணாநிதியை சினிமாவுக்கு அழைத்து வந்ததே எம்.ஜி.ஆர்.தான். அவர் நன்றாக கதை, வசனம் எழுதுகிறார் என்று எம்.ஜி.ஆர். தான் திரைத்துறையில் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் எம்.ஜி.ஆர்.தான் கருணாநிதியை முதல்-அமைச்சர் ஆக்கினார். தற்போது கருணாநிதி குடும்பம் செல்வாக்கோடு இருக்கிறார்கள். இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினை துணை முதல்-அமைச்சராக்க நினைக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் கூட சிறை சென்றுள்ளார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் செய்த தியாகம் என்ன?
சட்டமன்றத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வந்தால் துரைமுருகன் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து, அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.