< Back
மாநில செய்திகள்
வெற்றி, தோல்வி முக்கியமல்ல; உலகின் நம்பர் ஒன் வீரருக்கு எதிராக விளையாடியதே முக்கியம்:  பிரக்ஞானந்தாவின் தந்தை பேட்டி
மாநில செய்திகள்

வெற்றி, தோல்வி முக்கியமல்ல; உலகின் நம்பர் ஒன் வீரருக்கு எதிராக விளையாடியதே முக்கியம்: பிரக்ஞானந்தாவின் தந்தை பேட்டி

தினத்தந்தி
|
24 Aug 2023 8:09 PM IST

வெற்றி, தோல்வி முக்கியமல்ல என்றும் உலகின் நம்பர் ஒன் வீரருக்கு எதிராக விளையாடியதே முக்கியம் என்றும் பிரக்ஞானந்தாவின் தந்தை பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

'பிடே' உலக கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்தது. இதில் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர். இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டங்களை கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

நேற்று நடந்த இறுதிப்போட்டியின் 2-வது சுற்றில் ஒன்றரை மணி நேர முடிவில், 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு ஆட்டம் டிரா ஆனது. இதனால், இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டு, 1-1 என்று சமநிலையில் இருந்தனர். தொடர்ந்து, வெற்றியாளரை முடிவு செய்யும் டைபிரேக்கர் சுற்று இன்று மாலை தொடங்கியது.

இதில் டை பிரேக்கர் ஆட்டத்தின் முதல் சுற்றில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார். இந்த ஆட்டத்தில், 41 நகர்த்தல்கள் வரை போட்டி சமநிலையில் காணப்பட்டது. எனினும், பிரக்ஞானந்தாவுக்கு நேரம் குறைவாக இருந்தது. இதனால், அவரால் வெற்றி பெற முடியாமல் போனது.

சிறிது நேரத்திற்கு பின்னர் 2-வது சுற்று போட்டி தொடங்கியது. இதில், கருப்பு காய்களுடன் போட்டியை ஆட தொடங்கிய பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இந்த சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால், ரேபிட் முறையில் 2 போட்டிகள் நடைபெறும் சூழல் இருந்தது.

எனினும், இந்த போட்டியின் டை பிரேக்கரில் 2-வது சுற்று ஆட்டத்திலும் கார்ல்சன் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தினார். இதனால், பிரக்ஞானந்தா வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியிருந்தது. எனினும், கார்ல்சன் அதிரடியாக காய்களை நகர்த்தி வெற்றி பெற்றார். இதனால், உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் நார்வே வீரர் கார்ல்சன் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

இதனால், 2023 பிடே உலக கோப்பை போட்டியில் இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 2-வது இடம் பிடித்துள்ளார். இந்த போட்டி பற்றி அவருடைய தந்தை ரமேஷ் பாபு கூறும்போது, இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா விளையாடி உள்ளார்.

இந்த போட்டியில் வெற்றி அல்லது தோல்வி என்பது முக்கியமல்ல. ஆனால், உலகின் நம்பர் ஒன் வீரருக்கு எதிராக விளையாடியதே முக்கியம்.

அடுத்து, மற்றொரு போட்டி தொடரில் விளையாடுவதற்காக பிரக்ஞானந்தா ஜெர்மனிக்கு செல்ல இருக்கிறார் என பேட்டியில் கூறியுள்ளார். பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்