அகவிலைப்படி உயர்வு: முதல்-அமைச்சருக்கு, ஆசிரியர் சங்கங்கள் நன்றி
|அகவிலைப்படி உயர்வை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
சென்னை,
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. அதனை பின்பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளார். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம், என்பது போல கடந்த அகவிலைப்படி அரசாணையில் சொன்னதை இன்று செய்து காண்பித்து இருக்கிறார், தமிழ்நாடு முதல்-அமைச்சர். மத்திய அரசு உயர்த்திய 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உயர்த்தி வழங்கி உள்ளது.
மத்திய அரசு 1.7. 2023 முதல் முன்தேதியிட்டு வழங்கியுள்ளது. அதேபோலவே தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முதல்-அமைச்சர் அவர்கள் முன்தேதியிட்டு 1.7.2023 முதல் வழங்கி உள்ளார். நிலுவைத் தொகையுடன் அகவிலைப்படி உயர்வை பெற உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். முதல்-அமைச்சருக்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் அருள் சங்கு, பொதுச்செயலாளர் சரவணன், பொருளாளர் ராமஜெயம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ' தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1-ந்தேதி முதல் 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அகவிலைப்படியை முன்தேதியிட்டு உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது' என்று கூறியுள்ளனர். இதேபோல், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழக மாநில தலைவர் மு.ராஜேஷ்குமாரும், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.